Friday, August 19, 2011

இந்தியாவை உலுக்கிய அன்னாஹசாரே: பூ வியாபாரி காந்தியவாதியானார்

உண்ணாவிரத போராட்டத்தை உலகுக்கு கற்றுத்தந்த காந்தியின் அகிம்சை போராட்டத்தால் ஆங்கிலேய ஏகாதிபத்தியமே நடுங்கிப் போனது வரலாறு. அதே வழியில் இன்றும் உண்ணாவிரத போராட்டத்தால் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் அன்னாஹசாரே.

இந்த 76 வயது இளைஞரின் மனதில் கொளுந்து விட்டு எரியும் நெருப்பு மிகப்பெரிய போராட்டத்தை நாடு முழுவதும் பரவ வைத்துள்ளது. மிக மோசமான தொற்று நோய். அடி முதல் நுனிவரை செல்லரித்து விட்ட இந்த நோயை குணப்படுத்தியே தீரவேண்டும். இல்லாவிட்டால் நாடு அதாள பாதாளத்தில் வீழ்ந்து விடும் என்ற ஏக்கம் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரிடமும் உள்ளது.

எங்கும் லஞ்சம்... எதிலும் லஞ்சம்... என்று தலை விரித்தாடும் லஞ்சத்தால் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழல் செய்து குறுகிய காலத்திலேயே செல்வ செழிப்பில் மிதக்கிறார்கள். இதை பார்த்து படித்தவர்களும் பாதை மாறும் துர்பாக்கிய நிலைமை உருவாகி உள்ளது.

இப்படியே போனால் வருங்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நிழல்போல் தொடரும் ஊழலை வெட்டி வீழ்த்த முடியுமா? என்ற யதார்த்தமான கேள்வியும் மனதில் எழுகிறது. ஆனாலும் இதற்கு பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்ற ஆதங்கம் நம்மிடம் உள்ளது.

ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? என்று ஒவ்வொருவரும் யோசனையில் ஆழ்ந்து இருந்த நேரம்... இதோ நான் இருக்கிறேன் என்று ஆபத்பாந்தவனாக கையை உயர்த்தியவர்தான் அன்னாஹசாரே!

1937-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் பின்கார் கிராமத்தில் பாபுராவ் ஹசாரே- லட்சுமிபாய் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இளமையில் வறுமையோடு போராடியவர். 6 வயதிலேயே தந்தையை இழந்தார். அவரது சித்தி படிக்க வைப்பதாக கூறி மும்பைக்கு அழைத்து சென்றார். 7-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்குமேல் படிக்க வைக்க வசதி இல்லை.

இதனால் மும்பை தாதரில் பூ வியாபாரத்தை தொடங்கினார் ஹசாரே. பின்னர் பூக்கடை ஒன்றை சொந்தமாக தொடங்கினார். அதில் ஓரளவு வருமானம் வந்தது. இந்த நேரத்தில் (1962-ல்) சீனப்போரில் களம் இறங்க இந்திய ராணுவத்துக்கு இளைஞர்களை தேடினார்கள். தாய்நாட்டை காக்க தன்னை அர்ப்பணிக்க முன்வந்தார் ஹசாரே.

ராணுவத்தில் டிரைவராக சேர்ந்த ஹசாரே 1965-ல் இந்தியா- பாகிஸ்தான் போரில் எல்லைப் பகுதியில் எதிரிகளின் களத்தை துவம்சம் செய்ய ஒரு குழுவுடன் அனுப்பி வைக்கப்பட்டார். பாகிஸ்தான் படை நடத்திய தாக்குதலில் ஹசாரேயுடன் இருந்த அனைவரும் வீரமரணம் அடைந்தார்கள். தலையில் குண்டு காயத்துடன் ஹசாரே மட்டும் தப்பினார்.

எவ்வளவு ரத்தம் சிந்தினோம்...? எத்தனை உயிர்களை இழந்தோம்...? இதில் கிடைக்கப் போவது என்ன? என்ற விரக்தியின் உச்சத்துக்கு சென்றார் ஹசாரே. காண்டீபத்தை கீழே போட்டு விட்டு கலங்கி நின்ற அர்ஜுனனை போல் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை முடிவோடு புறப்பட்டார்.

அப்போது டெல்லி ரெயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றை வாங்கி படித்தார். அதில் அவர் கூறிய வாழ்க்கை தத்துவங்கள் ஹசாரேயின் மனதில் இருந்த தற்கொலை முடிவை மாற்றி மனதில் உறுதியையும், தெளிவையும் கொடுத்தது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை அர்த்தமாக்கி கொள்ள வேண்டும். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்கு பயன்தரும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தத்துவார்த்த சிந்தனை ஹசாரேயை மீண்டும் புது மனிதனாக்கியது.

39 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று சொந்த ஊரான ரலேகான்சித்திக்கு திரும்பினார். வாலிப முறுக்கோடு இருந்த ஹசாரே திருமண ஆசையை துறந்தார். சொந்த கிராம மக்களின் வறுமையை துடைக்க களம் இறங்கினார். மழைநீர் சேமிப்பு திட்டம் உள்பட பல முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தினார். இதனால் ரலேகான்சித்தி செழித்தது.

அகமத்நகர் மாவட்டத்திலேயே ரலேகான்சித்தி ஒரு முன் மாதிரி கிராமமாக உருவெடுத்தது. தனது கிராமப்பணியை நிறைவு செய்து திருப்தி அடைந்த ஹசாரே தனது போராட்ட வியூகத்தை விரிவாக்கினார். ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். ஊருக்கு சேவை செய்ய வரும் அரசியல்வாதிகள் ஊரை அடித்து உலையில் போடும் அநியாயத்துக்கு எதிராக வெகுண்டெழுந்தார்.

ஹசாரேயின் போராட்டத்தால் மராட்டிய மாநிலத்தின் அசைக்க முடியாத தலைவர்களான பால் தாக்கரே, சரத்பவார் போன்றவர்களே ஆடிப்போனார்கள்.

1996-ல் சிவசேனா ஆட்சியில் ஊழல் செய்த 2 மந்திரிகளை தனது போராட்டத்தின் மூலம் வீட்டுக்கு அனுப்பினார். 2003-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்த 4 மந்திரிகள் மீது விசாரணை கமிஷன் அமைக்க வைத்தார். ஊழலுக்கு எதிரான அவரது போர் 2-வது சுதந்திரபோர் என்று பேச வைத்துள்ளது.

ஊழலுக்கு எதிரான அவரது குரல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. அவரது உரத்த குரலுக்கு முன்பு செப்படி வித்தைகள் தவிடு பொடியாகி விட்டன. ஹசாரேயின் போராட்டத்தை அடக்க நினைத்த இந்திய பேரரசே காந்தியவாதியின் அஹிம்சை போராட்டத்தின் முன்பு அடிபணிந்து விட்டது.

பின்புலம் எதுவுமின்றி லட்சியத்துக்காக போராடும் ஹசாரேயின் போராட்டத்துக்கு இன்றோ, நாளையோ விடை கிடைத்து விடாது. ஆனால் இந்திய மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் இந்த புதிய மகாத்மாவின் பின்னால் அணி திரள்கிறார்கள். காந்திக்கு பிறகு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஹசாரேயின் போராட்டத்தை பற்றி மக்கள் தங்கள் கருத்தை அமைதியான முறையில் சொல்லி வருகிறார்கள். இது வலுவான ஜனநாயகத்தின் அடையாளம் என்று அமெரிக்கா கூறி உள்ளது.

தொடரும் 15 நாள் போராட்டத்தால் புதிய விடியலுக்காக இந்தியாவே காத்திருக்கிறது.

No comments: