சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, வரும் ஏப்ரல் 13ம் தேதி நடத்தப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை, ஒரு மாதத்துக்கு பின், மே மாதம் 13ம் தேதி நடக்கிறது. தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துள்ளன.
தமிழக சட்டசபையின் பதவிக் காலம், வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிகிறது. புதுச்சேரியில் மே மாதம் 28ம் தேதி சட்டசபை பதவிக் காலம் முடிகிறது. அதற்குள் புதிய அரசு அமைந்து, சட்டசபை துவக்கப்பட வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு, சட்டசபை பொதுத் தேர்தல் மே மாதம் 8ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே மாதம் 10ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. 13ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது. தற்போது, ஆட்சிக் காலம் முடியும் நிலையில், தமிழகத்துக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, தமிழகம், அசாம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை நேற்று வெளியிட்டார்.
இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. எனினும், ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து மே மாதம் 13ம் தேதி தான், ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து நடத்தப்படுகிறது. தேர்தலுக்கான அறிவிக்கை வரும் (மார்ச்) 19ம் தேதி வெளியிடப்படுகிறது. எனவே, அன்று முதல், வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்யலாம்.
மனுக்கள் தாக்கல் செய்ய மார்ச் 26ம் தேதி கடைசி நாள். வாபஸ் பெற 30ம் தேதி கடைசி நாள். தேர்தல் தேதி நேற்று மாலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துள்ளன. சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. தமிழகத்தில், மொத்தம் நான்கு கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் இரண்டு கோடியே 30 லட்சத்து 86 ஆயிரத்து 295 பேரும், பெண்கள் இரண்டு கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 481 பேரும், அரவாணிகள் 844 பேரும் உள்ளனர்.
மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 44 தொகுதிகள் ஆதிதிராவிடர்களுக்கும், இரண்டு தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 851 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மொத்தம் எட்டு லட்சத்து 5,124 வாக்காளர்கள் உள்ளனர்.தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரத்து 16 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 99.85 சதவீதம் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 99.9 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 100 சதவீதம் புகைப்பட வாக்காளர் பட்டியலும், புகைப்பட அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முக்கிய கட்சிகள் இன்னும் கூட்டணியையே முடிவு செய்யாமல் உள்ள நிலையிலும், தொகுதிப் பங்கீடு போன்றவை முடிவடையாத நிலையிலும், ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்க இருப்பது, அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி பங்கீட்டை முடித்து இம்மாதம் 20ம் தேதிக்குள், வேட்பாளர்களை மனு தாக்கல் செய்ய தயாராக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் அட்டவணை
தேர்தல் அறிவிக்கை வெளியீடு: மார்ச் 19 (சனிக்கிழமை)
மனு தாக்கல் செய்ய கடைசி நாள் : மார்ச் 26 (சனிக்கிழமை)
மனுக்கள் பரிசீலனை : மார்ச் 28 (திங்கள்)
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் : மார்ச் 30 (புதன்)
ஓட்டுப்பதிவு : ஏப்ரல் 13 (புதன்)
ஓட்டு எண்ணிக்கை : மே 13 (வெள்ளி)
தேர்தல் நடைமுறைகளை முடிக்க வேண்டிய நாள் : மே 16 (திங்கள்)
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் : மந்திரிகளுக்கு கட்டுப்பாடு:சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று அமலுக்கு வந்தன.
தேர்தல் நன்னடத்தை விதிகள் வருமாறு:* ஆட்சியில் உள்ள கட்சிக்கு சாதகமாக, வாக்காளர்களை கவரும் வகையில், புதிய திட்டங்கள், அறிவிப்புகள், சலுகைகள் அல்லது நிதி ஒதுக்கீடுகள் எந்த விதத்திலும் வெளியிடப்படக் கூடாது. உறுதிமொழிகள் அளிக்கக் கூடாது. திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் கூடாது.
* இந்த கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களுக்கும், ஏற்கனவே செயலில் உள்ள திட்டங்களுக்கும் பொருந்தும்.
* அரசு திட்டங்களுக்கு புதிய நிதி ஒதுக்கீடுகள் செய்யக் கூடாது.
* ஒரு திட்டத்துக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பதற்காகவோ, கவர்னர் உரை அல்லது பட்ஜெட்டில் அதுபற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது என்பதற்காகவோ, அந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று பொருள் அல்ல.
* எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி உட்பட எந்த நிதியும், நலத்திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு ஒதுக்கக் கூடாது. கான்ட்ராக்ட்கள் விடக் கூடாது.
* எனினும், முடியும் தறுவாயில் உள்ள திட்டங்கள், அவற்றின் மக்கள் நலப் பணிகள் போன்றவற்றை நிறுத்தவோ, தாமதப்படுத்தவோ தேவையில்லை.
* அப்படிப்பட்ட திட்டங்களை அதிகாரிகள் தான் துவக்க வேண்டும். அரசியல் கட்சியினரைக் கொண்டோ, பெரிய கூட்டம் நடத்தியோ, விழாக்கள் நடத்தியோ துவக்கக் கூடாது. குறிப்பாக, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களை கவரும் வகையில், திட்டங்களை துவக்கக் கூடாது.
* செயல்பாட்டில் இருந்தாலும், நலத் திட்டங்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தல் கூடாது.
* பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலும், களப்பணி துவக்கப்படாத நிலையில், எந்த பணியையும் துவக்கக் கூடாது.
* ஏற்கனவே அமலில் உள்ள நலத்திட்டங்களை தொடரலாம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை தொடரலாம். அதற்குரிய நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
* பல்வேறு வகையான புதிய பணிகளை, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, மேற்கொள்ளலாம்.
* அரசு தரப்பில் எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதும், தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெறாமல் மேற்கொள்ளக் கூடாது.
* பேரழிவு காரணமாக, நிவாரண உதவிகள், கருணைத் தொகைகள் போன்றவற்றை, நிர்ணயிக்கப்பட்ட அளவில், தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்த பின் வழங்க வேண்டும்.
* முதல்வர், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கு நேரடியாக நிதியை, தேர்தல் கமிஷனின் அனுமதி பெறாமலேயே வழங்கலாம்.
* அவசர கால நிவாரணப் பணிகளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள, தேர்தல் கமிஷனுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
* அரசு நிதியில் இருந்து, கட்சி அல்லது அரசின் சாதனைகள் பற்றிய விளம்பரங்கள் எதையும் செய்யக் கூடாது.
* தேர்தல் பணியில் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களையும் இடமாறுதல் செய்ய தடை விதிக்கப்படுகிறது.
* நிர்வாக தேவைகளுக்காக ஒரு அதிகாரியின் மாற்றம் அவசியம் என்றால், தேர்தல் கமிஷனை அணுகி, ஒப்புதல் பெற்ற பின் மாற்ற வேண்டும்.
* அரசு மற்றும் பொதுத் துறைகளில் எவ்வித நியமனங்களோ, பதவி உயர்வுகளோ வழங்கக் கூடாது.
* அமைச்சர்கள் தலைநகரில் இருந்து, மக்கள் நலனுக்காக தவிர்க்க முடியாத காரணத்தால் அலுவல் ரீதி பயணமாக செல்லும் போது, அந்த துறையின் செயலர், தலைமைச் செயலருக்கு என்ன காரணத்துக்காக பயணம் செய்கிறார் என்ற கடிதத்தை அனுப்ப வேண்டும். அதன் பிரதியை தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும். இதுபோன்ற பயணத்துக்கு மட்டும், அரசு வாகனம் மற்றும் தங்கும் வசதியை தலைமைச் செயலர், அந்த அமைச்சருக்கு வழங்குவார்.
* தேர்தல் நடக்கும் எந்த தொகுதிக்கும், மாநில அமைச்சர் தனது துறை தொடர்பாக அலுவல் ரீதியான பயணம் மேற்கொள்ளக் கூடாது.
* எனினும், குறிப்பிட்ட காரணங்களுக்காக அலுவல் ரீதியான பயணங்களின் போது, தேர்தல் பிரசாரத் திட்டத்தையோ, அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ளக் கூடாது.
* தேர்தல் தொடர்பான தொகுதி அதிகாரிகள் அல்லது மாநில அதிகாரிகளை, அலுவல் ரீதியான ஆலோசனைக்கு கூட, தன்னை வந்து சந்திக்குமாறு எந்த அமைச்சரும் அழைக்கக் கூடாது.
* தனிப்பட்ட பயணமாக தொகுதிக்கு வரும் அமைச்சரை எந்த அதிகாரியும் சந்திப்பது, குற்றமாக கருதப்படும். அதுவும், தேர்தல் அதிகாரியாக இருந்தால், சட்ட நடவடிக்கைக்கு ஈடுபடுத்தப்படுவர்.
* அமைச்சர்கள் தங்களது தனிப்பட்ட பயணங்களுக்கு, சொந்த வாகனங்களை பயன்படுத்தலாம். எனினும், அலுவல் ரீதியான உதவியாளர்கள் உடன் செல்லக் கூடாது.
* அரசு மற்றும் பொதுத் துறை விருந்தினர் இல்லங்களில், எந்த அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.,வுக்கும் தங்க இடம் அளிக்கக் கூடாது. அந்த இல்லங்கள், தேர்தல் தொடர்பான அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் தங்க பயன்படுத்தப்படும். எனினும், அரசின் "இசட்' பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு இதில் விதிவிலக்கு உண்டு.
* அரசு வாகனங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது.
* தவறாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
No comments:
Post a Comment