அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எங்களது கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயத்தமான நிலையில் கடந்த ஜனவரி மாதம் அ.தி.மு.க. பிரதிநிதி கள் அவர்களுடைய கட்சியுடன் கூட்டணிக்காக என்னை அணுகினார். அந்த பேச்சு வார்த்தையின் போது மதிப்பிற்குரிய பா.ம.க. வும் மற்றும் தே.மு.தி.மு.க.வும் கூட்டணியில் சேர இருப்பதாக எங்களுக்கு எத்தனை தொகுதி என்பது முடிவடையாமல் இருந்தது.
அ.தி.மு.க. பிரதிநிதிகள் என்னை கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடந்த ஜனவரி 14-ந்தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்தது அனைவரும் அறிந்தது. அதன்பிறகு சிவகாசியில் கடந்த ஜனவரி 23-ந்தேதி எங்கள் கட்சியின் சார்பில் வெற்றிகரமாக நடந்த பொதுக் கூட்டத்துக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.
பா.ம.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அவர்கள் விலகியதால் நான் நியாயமாக கோரி இருந்த தொகுதிகளை கேட்டதற்கு அ.தி.மு.க. தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கிட்டத்தட்ட 55 நாட்கள் கடந்து இன்று வரை எந்தவித ஆரோக்கியமான உடன்பாடும் ஏற்படவில்லை. இதன் காரணமாக பிப்ரவரி 27-ந்தேதி எங்கள் கட்சியின் சார்பில் அம்பாசமுத்திரத்தில் நடைபெற இருந்த பொதுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சங்கரன்கோவில், கோவில்பட்டி, தென்காசி ஆகிய தொகுதிகளில் எங்களது கட்சியின் சார்பில் நடைபெற இருந்த பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.
இது காலம் தாழ்த்தும் செயலாக நாங்கள் உணர்கிறோம். அவர்கள் பேச்சில் கூட்டணிக்கு உகந்த நோக்கம் இல்லாதது தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே நேரம் கடந்த காலத்தில் இன்னும் காத்திருப்பது அர்த்தம் இல்லை என்ற காரணத்தினாலும் கோரிய தொகுதிகளை கொடுக்க மனம் இல்லாதது தெளிவாக தெரிந்ததாலும் எங்கள் கட்சியின் அனைத்து மாவட்டத் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது சுய மரியாதையோடு இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டணியில் இருந்து விலகுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்பதை எங்கள் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்த பிறகு உணர்ந்தோம். அதன்பிறகு முறையாக அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் தலைவரிடம் போய் கூறியபடி கூட்டணியை விட்டு விலகும் கடிதம் நாளை கொடுக்கும். இன்னும் ஓரிரு நாட்களில் பத்திரிகையாளர்களை சந்தித்து விவரங்களை தெரிவிப்பேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
1 1
No comments:
Post a Comment