அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தே.மு.தி.க.,வுடனான தொகுதி பங்கீடு அறிவிப்பு, வரும் நான்காம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, நான்காம் தேதி விஜயகாந்த் சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவுள்ளார் என, இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு ஏற்கனவே முடிவாகியுள்ளது. மனித நேய மக்கள் கட்சி - புதிய தமிழகம் - இந்திய குடியரசுக் கட்சி - அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் - பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது.கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தமிழக சட்டசபைக்கு மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கும் என்று அனைத்து கட்சிகளிடமும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13ம்தேதி நடக்கவுள்ளதாக நேற்று தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, பிரசாரத்தில் இறங்க, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
தற்போது தேய்பிறை நடந்து வரும் நிலையில், இந்த காலகட்டத்தில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதை தே.மு.தி.க., விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேய்பிறை முடிந்து, வரும் 4ம்தேதி அமாவாசை வருவதால், அன்று இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்கும் வகையில், வரும் 4ம்தேதி ஜெயலலிதாவை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் முடிவில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதே நாளிலோ அல்லது அதற்கு முன்பாகவோ ம.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படவுள்ளது.
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த பின், வரும் 6ம்தேதி ஜெயலலிதா கொடநாடு செல்கிறார். ஏற்கனவே இருமுறை மாவட்டச் செயலர் கூட்டம் அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், கொடநாட்டில், ஏழாம் தேதியன்று, மாவட்ட, ஒன்றிய, நகரச் செயலர்கள் கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்ப மனு பெற்று, அவற்றின் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. மனுக்களின் அடிப்படையில், ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.இத்துடன், ஏழாம் தேதி நடக்கவுள்ள மாவட்ட செயலர் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில், ஒரு தொகுதிக்கு மூன்று பேர் என பரிந்துரைப் பட்டியல் பெறப்படுகிறது. இந்த இரு பட்டியல்களையும் ஆய்வு செய்து, வேட்பாளர்களை ஜெயலலிதா முடிவு செய்து அறிவிக்கவுள்ளார்.அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அல்லது முதல்கட்ட வேட்பாளர் பட்டியல், வரும் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 12ம்தேதி வரை கொடநாட்டில் தங்கவுள்ள ஜெயலலிதா, அங்கிருந்து தனது பிரசாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளதாகவும் அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment