சென்னை:அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதி பங்கீடு இன்று முடிவாகிறது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கையெழுத்திடும் வாய்ப்புள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அடுத்த மாதம் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உடன்பாடுகளும் ஓரளவு முடிவுக்கு வந்துவிட்டன. அ.தி.மு.க., அணியில் நீண்ட எதிர்பார்ப்புக்குள்ளான தே.மு.தி.க.,வும் 41 தொகுதிகள் பெற்றுவிட்டது.
இந்த அணியில் மூன்றாவது பெரிய கட்சியாக கருதப்படும், ம.தி.மு.க., மற்றும் கணிசமான ஓட்டு வங்கிகளை வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதல் கட்டம், இரண்டு கட்டமாக இழுபறி ஏற்பட்டு, இறுதி கட்டமாக நேற்று சுமுகமாகமுடிவடைந்துள்ளது.கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க.,வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதே தொகுதியை ஒதுக்க வேண்டும் என அக்கட்சி விருப்பம் தெரிவித்தது.ஆனால், தற்போது அ.தி. மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூடுதலாக இடம் பெறுவதால், சீட்டுகளை குறைத்துக் கொள்ளும்படி அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த லோக்சபா தேர்தலில் ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளின் அடிப்படையில் 25 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், ஆரம்பத்திலிருந்து அ.தி.மு.க., வின் நம்பிக்கைக்குரிய தோழமை கட்சியாக, ம.தி.மு.க., விளங்குவதால் அ.தி.மு.க., விட்டுக் கொடுக்க வேண்டும் என, ம.தி.மு.க., தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இந்நிலையில் அக்கட்சிக்கு 21 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கன்றன. அதே போல் தொழிலாளர்கள் ஓட்டுக்களையும், கணிசமான ஓட்டு வங்கியை வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 25 தொகுதிகளை கேட்டு விருப்பம் தெரிவித்தது.
அக்கட்சிக்கு முதல் கட்டமாக, 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., முன் வந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் தொழிற்சங்கம், மாதர் சங்கம், இளைஞர் சங்கம், விவசாயிகள் சங்கம், நில மீட்பு, தீண்டாமை கொடுமை தடுப்பு, ஆலயபிரவேச இயக்கங்களை நடத்தி கட்சியை வலுப்படுத்தியுள்ளதை அக்கட்சி சுட்டிக் காட்டியதால், கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., விடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 தொகுதிகளை அ.தி.மு.க., ஒதுக்கீடு செய்ய முன் வந்துள்ளது.அதே போல் தே.மு.தி.க., கூட்டணியை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த தேர்தலில் தி.மு.க., ஒதுக்கீடு செய்த 10 தொகுதிகளை அப்படியே ஒதுக்கவும் அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கடைசி நேரம் மாற்றம் இருப்பின்ம.தி.மு.க., வுக்கு ஓரிரு தொகுதிகள் குறைக்கவும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளை கூட்டவும் வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, சுப்பிரமணியசாமி தலைமையிலான ஜனதா கட்சி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், வேட்டவலம் மணிகண்டன் தலைமையில், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, நாடார் சமுதாய கூட்டமைப்பு, கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த கொங்கு பேரவை, அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த கட்சி உட்பட சில உதிரி கட்சிகளும் அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதிகள் கேட்டு விருப்பம் தெரிவித்துள்ளன. இதில் சில கட்சிகளுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கப்படலாம் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment