அ.தி.மு.க. கூட்டணியில், கட்சிகளுக்கு இடஒதுக்கீடு ஓரளவுக்கு முடிந்துவிட்டது. ம.தி.மு.க.வுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ள வைகோ மறுத்துவிட்டார். 2006-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ம.தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டது.
அப்போது ம.தி.மு.க.வுக்கு 35 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் அப்போது ஜெயலலிதாவும், வைகோவும் கையெழுத்திட்டனர். இந்த தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டணியில் சேர்ந்திருப்பதால், ம.தி.மு.க.வில் பழைய 35 இடங்கள் கிடைக்காவிட்டாலும், 22 இடங்கள், ஏன் குறைந்தபட்சம் 21 இடங்களாவது வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்படுவதாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதை கேட்டு வைகோவும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தங்கள் அதிருப்தியை அவர்கள் தெரிவித்தவுடன், 7 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறினார்கள். கூடுதல் இடங்கள் வேண்டுமென்று ம.தி.மு.க.வில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
பின்பு நேற்று மாலையில் ம.தி.மு.க.வுக்கு 8 இடங்கள் ஒதுக்குகிறோம் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு செல்லுங்கள் என்று அழைப்பு விடப்பட்டதாகவும், அதற்கு வைகோ மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று பிற்பகலில் இந்திய கம்ïனிஸ்டு கட்சி சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் தலைவர்கள் வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து ம.தி.மு.க. வுடன் ஒப்பந்தம் செய்ய வைகோ வரப்போகிறார் என்று ஏராளமான பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். எல்லோருக்கும் கடைசி இடத்தில் ம.தி.மு.க.வுக்கு இடம் கொடுத்தது வைகோவுக்கும், அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளித்துள்ளது என்றும், அதனால் 8 இடங்களை ஏற்றுக்கொள்ள வைகோ மறுத்துவிட்டார் என்றும், ஆகவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வரமாட்டார் என்றும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அ.தி.மு.க.வுடன் ஒப்பந்தம் செய்து 8 இடங்களை வாங்கிக்கொள்ளாத பட்சத்தில், அடுத்து என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது குறித்து ஆராய ஓரிரு தினங்களில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வைகோ கூட்டி முடிவு செய்வார் என்றும் ம.தி.மு.க. தொண் டர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment