HERE IS THE ARTICLE.....
ஜாதிகள் உள்ளதடி பாப்பா; பெரிய கட்சிகளே கூட்டணிக்கு இழுக்கும் அவலம்
"ஜாதி, மத, பேதமற்ற சமுதாயம் அமைப்போம்' என்பது தான் எல்லா அரசியல் கட்சிகளின் லட்சியமாக சொல்கின்றனர். ஆனால், ஜாதி பின்னணி இல்லை என்றால், அரசியலே செய்ய முடியாது என்பது தான் உண்மையாக இருக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள் கூட, ஜாதி கட்சிகளை வளர்த்து விடுவது, நடுநிலையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தல் சமயங்களில் மட்டும் ஜாதிக் கட்சிகளுக்கு, திடீர் ஜாதிப் பற்று ஏற்பட்டு, ஏதாவது ஒரு கூட்டணியில் அதன் தலைவர்கள் மட்டுமாவது, "சீட்' பெற்றுக் கொள்வது வழக்கமாகி வருகிறது.ஆரம்பத்தில், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேல் நாயக்கர், முத்துராமலிங்க தேவர், மூக்கையா தேவர் போன்றவர்கள் ஜாதிப் பின்னணியில் கட்சி நடத்தினர். ஆனால், இவர்கள் மாறி, மாறி கூட்டணி அமைத்தது மற்றும் பிரதான கட்சிகளில் இணைந்தது போன்ற காரணங்களால், இவர்களது கட்சிகள் காணாமல் போய்விட்டன.அதன் பின், நீண்ட காலமாக, பிரதான கட்சிகளில் தான், ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவது, ஜாதி பலத்துக்கு ஏற்ப அமைச்சர்களை நியமிப்பது போன்றவை நடந்து வந்தது. 1996ல் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் அலையிலும், பா.ம.க., நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்ற பின், அக்கட்சியின் பக்கம், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய பெரிய கட்சிகளின் பார்வை திரும்பியது.
அப்போது முதல், பா.ம.க., தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியில் அதிக எண்ணிக்கையில், "சீட்'களைப் பெற்று, தன்னை வளர்த்துக் கொண்டது. இதை பார்த்து மற்ற ஜாதி அமைப்புகளுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.கடந்த, 2001 சட்டசபை தேர்தலின் போது, அதிகளவில் ஜாதிக் கட்சிகளுக்கு, "சீட்' ஒதுக்கி, 18 கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணி அமைத்து தோல்வியடைந்தது. அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற பா.ம.க.,வும், தி.மு.க., அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடமும் தவிர, மற்ற ஜாதிக் கட்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.இதன் பின், 2006 தேர்தலில் ஜாதிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அ.தி.மு.க., அணியில் விடுதலைச் சிறுத்தைகளும், தி.மு.க., அணியில் பா.ம.க.,வும் இடம்பெற்றன. மற்ற ஜாதிக் கட்சிகள் எல்லாம், வெளியில் இருந்து ஆதரவு அளித்தன.
ஆனால், இந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டுமென தீவிரமாக களமிறங்கியுள்ளன. இதை சாதகமாக பயன்
படுத்திக் கொண்ட ஜாதிக் கட்சிகள், இரு அணிகளிலும் போட்டி போட்டு, "சீட்' பெற்றுள்ளன.தி.மு.க., அணியில் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமன்றி, கவுண்டர்களின், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், முக்குலத்தோரின், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், நாடார் இன மக்களின், பெருந்தலைவர் மக்கள் கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன.
அ.தி.மு.க., அணியில் புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், கொங்கு இளைஞர் பேரவை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்ற ஜாதிக் கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
இது தவிர, மீதமுள்ள ஜாதிக் கட்சிகள் இணைந்து புதிய அணியை உருவாக்கவும் முயற்சிகள் எடுத்துள்ளன. இப்படியே போனால், இந்தத் தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொண்டு திருப்திபட்டுள்ள ஜாதிக் கட்சிகள், அடுத்த தேர்தலுக்குள் பலத்தை அதிகப்படுத்தி, கூடுதல் தொகுதிகள் கேட்கத் துவங்கிவிடும்.வரும் தேர்தல்களில், ஒவ்வொரு
ஜாதிக்கும் இத்தனை தொகுதிகள் என்ற அடிப்படையில், அறிவிக்கப்படாத இடஒதுக்கீடே வந்தாலும் வியப்பதற்கில்லை.இதனால், பிரதான அரசியல் கட்சிகளில் ஜாதி அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றுள்ள தலைவர்கள் தங்களுக்கு ஜாதிப் பின்னணி இல்லாவிட்டால், கட்சியில் காலந்தள்ள முடியாமல் போய்விடும் என்ற கவலையில் உள்ளனர்.
ஜாதியை முன்னிறுத்தும் கட்சிகள்
பாட்டாளி மக்கள் கட்சி: ராமதாஸ்
புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: திருமாவளவன்
புதிய நீதிக்கட்சி: ஏ.சி.சண்முகம்
சமத்துவ மக்கள் கட்சி: சரத்குமார்
நாடாளும் மக்கள் கட்சி: கார்த்திக்
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்: ஸ்ரீதர் வாண்டையார்
மூவேந்தர் முன்னேற்ற முன்னணி: சேதுராமன்
கொங்குநாடு முன்னேற்றக் கழகம்: "பெஸ்ட்' ராமசாமி
சமூக சமத்துவப் படை: சிவகாமி
தலித் முன்னணி: குமரி அருண்
இந்திய ஜனநாயக கட்சி: பச்சமுத்து
யாதவ மகா சபை: தேவநாதன்
புரட்சி பாரதம்: ஜெகன் மூர்த்தி
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்: ஜான் பாண்டியன்
No comments:
Post a Comment