Saturday, March 5, 2011

அஇஅதிமுக கூட்டணியில் விஜயகாந்த் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு!


சென்னை: அஇஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) போயஸ் தோட்டத்திற்கு சென்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இன்று இரவு 9.30 மணி முதல் 9.50 வரை இருவரும் தேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்துப் பேசினர்.

இச்சந்திப்பிற்கு பின்னர் வெளியே வந்த விஜயகாந்த்தை சந்திக்க செய்தியாளர்களும், போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சூழ்ந்தனர்.

பேச்சுவார்த்தை குறித்து எதுவும் தெரிவிக்காமல் வேகமாகச் சென்ற விஜயகாந்த் காரில் ஏறிப் புறப்பட்டார்.

பின்னர் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் வெளியிட்ட கூட்டறிக்கையை செய்தியாளர்களுக்கு கொடுத்தனர், ஜெயலலிதாவின் இல்ல நிர்வாகிகள்.

அந்த கூட்டறிக்கையில், "13.4.2011 அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவிற்கும், தேமுதிகவிற்கும் இடையே இன்று 4.3.2011 ஏற்பட்ட ஒப்பந்தப்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 41 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது," என்று தெரிவித்துள்ளனர்.

அறிக்கையின் கீழ் ஜெயலலிதாவும்- விஜயகாந்தும் கையெழுத்திட்டுள்ளனர்.

No comments: