நடிகர் கார்த்திக் அரசியலில் ஈடுபட தொடங்கியதும், பார்வர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அவர் போட்டியிடா விட்டாலும் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அந்த தேர்தலில் 23 தொகுதிகளிலும் பார்வர்டு பிளாக் கட்சி சுமார் 38 ஆயிரம் ஓட்டுக்களை வாங்கி இருந்தது.இதற்கிடையே பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர்களுக்கும், நடிகர் கார்த்திக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் நடிகர் கார்த்திக் பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து விலகினார். கடந்த 2009-ம் ஆண்டு அவர் நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதில் விருதுநகர், தேனி ஆகிய 2 தொகுதிகளில் நாடாளும் மக்கள் கட்சி போட்டியிட்டது. விருதுநகரில் கார்த்திக்கும், தேனியில் பார்வதி என்ற பெண்ணும் களம் இறங்கினார்கள்.முதல் தேர்தலில் கார்த்திக்கிற்கு தோல்வி ஏற்பட்டது. விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அவருக்கு மொத்தமே 17 ஆயிரத்து 336 ஓட்டுக்கள்தான் கிடைத்தன.தேனி பாராளுமன்ற தொகுதியில் பார்வதி 7640 ஓட்டுக்கள் வாங்கினார்.என்றாலும் நடிகர் கார்த்திக் கட்சிப் பணிகளை தொய்வின்றி செய்து வருகிறார்.
மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, விருது நகர் மாவட்டங்களில் கார்த்திக் கட்சிக்கு ஓரளவு வாக்குகள் உள்ளது. எனவே தற்போதைய தேர்தலில் இந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை அவர் குறி வைத்துள்ளார்.கடந்த மாதம் நடிகர் கார்த்திக் போயஸ் கார்டனுக்கு சென்று அ.தி.மு.க. கூட்டணியில் தன்னை சேர்த்துக் கொண்டார்.
அவர் அ.தி.மு.க. தலைவர்களிடம் நாடாளும் மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது கோரிக்கை ஏற்கப் படவில்லை. இதையடுத்து தனக்கும், தனது கட்சியைச் சேர்ந்த இன்னொருவருக்கும் என இரண்டு தொகுதிகளை தாருங்கள் என்று கேட்டார். ஆனால் அ.தி.மு.க. தலைவர்கள் கார்த்திக் கேட்கும் தொகுதிகளை தர இயலாது என்று கூறி விட்டனர்.
இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்து வரும் ம.தி.மு.க. வுக்கே தொகுதிகளை ஒதுக்காமல் அ.தி.மு.க. காலம் தாழ்த்தியதால், மற்ற கட்சி களும் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டன. இதையடுத்து நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியாவது தாருங்கள் என்று கார்த்திக் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு இதுவரை அ.தி.மு.க. தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூறினார்கள். கடந்த ஓரிரு நாட்களாக நடிகர் கார்த்திக் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச முடியவில்லை என்று தெரிகிறது.
இது நடிகர் கார்த்திக்கை அதிருப்தி அடைய வைத்துள்ளது. அ.தி.மு.க. தரப்பில் இருந்து பதில் வராததால் நடிகர் கார்த்திக் நேற்று நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.தி.மு.க. தரப்பில் இருந்து ஒரு தொகுதி கூட தரவில்லையே என்று நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கவலை தெரிவித்து பேசினார்கள்.
சில நிர்வாகிகள் தனியாக போட்டியிடலாம் என்றனர். அவர்களை நடிகர் கார்த்திக் சமரசம் செய்து, 16-ந்தேதி வரை பொறுமையாக இருக்கக் கேட்டுக் கொண்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. தலைவர்கள், தன்னை அழைத்து பேசா விட்டால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகலாம் என்று கார்த்திக் தன் கட்சிக் காரர்களிடம் கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment