Wednesday, March 23, 2011

என்னை தேர்வு செய்தால் எம்.எல்.ஏ. பதவியில் முத்திரை பதிப்பேன்: நடிகர் அருண்பாண்டியன் பேட்டி




நடிகர் அருண்பாண்டியன் தே.மு.தி.க. வேட்பாளராக பேராவூரணி தொகுதியில் போட்டியிடுகிறார். 1986-ல் ஊமை விழிகள் படத்தில் நடித்து பிரபலமானவர் அருண்பாண்டியன். இணைந்த கைகள், அசுரன், தேவன், திருப்பதி, ரோஜா மலரே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விருதகிரி படத்தில் நடித்தார். வேட்பாளரானது குறித்து அருண்பாண்டியன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

விஜயகாந்தும் நானும் நெருங்கிய நண்பர்கள். ஊமை விழிகள் படத்தில் இருந்து நெருக்கமாக பழகி வருகிறோம். எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமூக சேவை பணிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. “நந்தலாலா”, “பேராண்மை”, “அங்காடித்தெரு” போன்ற நான் தயாரித்த படங்கள் சமூக சிந்தனை உடையவை. எனக்கு போதும் என்கிற அளவு பணமும், புகழும் இருக்கிறது. இனிமேல் மக்கள் பணியாற்றுவது என முடிவு செய்துள்ளேன்.

பேராவூரணி எனக்கு பரிச்சயமான தொகுதி. அங்கு எனக்கு நிறைய நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர். என்னை வெற்றி பெறச் செய்தால் முன் மாதிரி எம்.எல்.ஏ.வாக பணியாற்றுவேன். சட்டமன்ற உறுப்பினருக்கு உள்ள அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வேன். தேர்தல் கமிஷனர்கள் பலர் வந்து போய் உள்ளனர். டி.என். சேஷன் பொறுப்பேற்ற போதுதான் அதன் மகத்துவத்தை அறிய முடிந்தது. நானும் எம்.எல்.ஏ. பதவியை பயன்படுத்தி முத்திரை பதிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: