Tuesday, September 20, 2011

கூடங்குளம் உண்ணாவிரத போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வார காலமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதில் பங்கேற்று பொது மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையங்களை அகற்றக் கோரி இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் நடத்திவரும் உண்ணாவிதரப் போராட்டம் 10-வது நாளாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

மராட்டிய மாநிலம், ரத்தினகிரியில் 1,650 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பிரான்ஸ் நாட்டின் அரேவா நிறுவனத்திற்கு அளித்தது. அதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். இவர்களுக்கு மராட்டிய மாநிலத்தின் பல்வேறு மனித உரிமை, பொது நல அமைப்புகளும் துணை நின்று போராடி வருகின்றன.

எந்த அடிப்படையில் மராட்டிய மாநில மக்கள் அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரோ, அதே அடிப்படையில்தான் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழர்களின் எந்த ஒரு நியாயமான கோரிக்கையையும் பொருட்படுத்தாத மத்திய காங்கிரஸ் அரசு இந்த அறப்போராட்டத்தையும் கண்டும் காணாமல் இருக்கிறது.

ஜப்பான் கடற்பகுதியில் ஏற்பட்டதுபோல், நமது நாட்டில் அந்த அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்படாது. எனவே அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட ஆழிப்பேரலைத் தாக்குதலில் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் மறந்து விடக்கூடியதா?

தாக்குதலுக்கு கூடங்குளம் அணு மின் நிலையங்கள் உள்ளாகும்போது அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். கூடங்குளத்தில் இருந்து 28 சதுர கி.மீ. சுற்றளவில் நாகர்கோவில் நகரத்தையும் உள்ளடக்கி 2 1/2 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

அணு உலைகளைத் தவிர்த்து மின்சாரம் தயாரிக்க அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலைகள், மரபு சாரா எரிசக்திகள் ஆகியன மட்டுமின்றி, என்றென்றும் கிடைக்கும் சூரிய சக்தி பெரும் அளவு மின் தயாரிப்பிற்கு ஆதாரமானதாகும். ஆகவே, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு மின் உலைகளுக்கு மறுப்பு தெரிவிப்போம், மக்களின் உயிர் காக்கும் தொழில் நுட்பங்களுக்கு கதவைத் திறப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: