'கொம்பன்' படத்தைத் தடை செய்யக்கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி போராட்டங்கள் அறிவிக்க, அதற்குப் பதிலடியாக சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஒரு திரைப்படத்தில் என்ன கதை, எத்தகைய கருத்து எனத் தெரியாமலேயே அந்தப் படத்துக்கு எதிராகப் பிரச்சினைகள் கிளப்புவது தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கிருஷ்ணசாமி திரைப்படங்களுக்கு எதிராகப் போராடுவதையே தனது கட்சியின் முழு நேரக் கடமையாக்கிவிட்டார் போலிருக்கிறது.
திரைப்படங்களுக்கு எதிராகப் போராடுவது எல்லாம் ஒரு மதிப்புமிக்க தலைவருக்கு சிறுமையாகப் படவில்லையா? 'கொம்பன்' படத்தால் தென் மாவட்டங்களில் சாதியச் சண்டைகள் உருவாகும் அபாயம் இருப்பதாகச் சொல்லும் கிருஷ்ணசாமி இதுகாலம் வரை திரைப்படங்களால் அப்படி வன்முறைகள் உருவான வரலாற்றைச் சொல்ல முடியுமா?
சில மாதங்களுக்கு முன்னர் சாதியக் கொலைகள் நிகழ்ந்ததே அது எந்தப் படத்தின் காரணமாக என்று சொல்ல முடியுமா? 'கொம்பன்' படம் நின்றுவிட்டால், அதன் பிறகு தென் மாவட்டத்தில் எந்தச் சாதிக் கலவரமோ கொலைகளோ நடக்காது; அப்படி நடந்தால் நானே பொறுப்பு என கிருஷ்ணசாமியால் உறுதி ஏற்க முடியுமா?
மேகேதாட்டு அணை, நியூட்ரினோ திட்டம் என மக்களைப் பாதிக்கும் எத்தனையோ பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கையில், ஒரு திரைப்படப் பிரச்னையைத் தூக்கிக் கொண்டு போராடுவது கிருஷ்ணசாமிக்கு சரியாகப்படுகிறதா? மக்கள் நலனுக்காக நிற்கிற தலைவனாக மேகேதாட்டு, நியூட்ரினோ திட்டங்களைத் தடை செய்யச் சொல்லி நீதிமன்றத்துக்குப் போகாதா கிருஷ்ணசாமி, 'கொம்பன்' படத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்துக்குப் போவது நகைப்பாகத் தெரியவில்லையா?
'கொம்பன்' படத்தில் தவறான காட்சிகள் இடம்பெற்று இருப்பதாகச் சொல்லி வழக்குப் போட்டிருக்கும் கிருஷ்ணசாமி, அவருடைய அரசியல் வாழ்க்கையில் அத்தனை முடிவுகளையும் சரியாகத்தான் எடுத்தாரா? அதிமுக வின் கூட்டணியில் இடம்பிடித்து எங்களைப் போன்றவர்களின் பரப்புரையால் வெற்றி பெற்று, திமுகவைச் சேர்ந்த கனிமொழிக்கு ராஜ்யசபா தேர்தலில் ஓட்டு போட்டாரே கிருஷ்ணசாமி...அந்தத் தவறைக் கண்டித்து அவருக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளனும் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டால் அவரால் தாங்க முடியுமா?
'கொம்பன்' என்கிற தலைப்பே சாதிய அடையாளமாக இருப்பதாகச் சொல்வது தமிழ்த் தெரியாத தலைவர்கள் பேச வேண்டிய பேச்சு. கொம்பன் என்றால் உயர்ந்தவன், பலசாலி, உச்சத்தில் இருப்பவன் என்றுதான் அர்த்தமே தவிர, அது சாதியச் சொல் அல்ல. 'நீ பெரிய கொம்பனா' எனக் கிராமத்தில் பேசுவதும், 'அந்த மரக்கொம்பை ஒடி' எனச் சொல்வதும் தமிழ் வழக்கில் இருக்கும் வார்த்தைகள்தானே... 'கொம்பன்' என்கிற வார்த்தையே தவறு என்றால் மாட்டுக் கொம்புக்கு இனி மாற்று வார்த்தை கண்டுபிடித்துக் கொடுப்பாரா ? 'கும்கி' படத்தில் ஒரு யானைப் பாத்திரத்துக்கு 'கொம்பன்' என்றுதான் பெயர் வைத்திருப்பார்கள். அப்படிப்பார்த்தால் அந்த யானை தேவர் சாதி யானையா?
இப்போது 'கொம்பன்' படத்துக்கு எதிராகப் போராடுவதுபோல் முன்பு கமலஹாசன் நடித்த 'சண்டியர்' படத்துக்கு எதிராகவும் கிருஷ்ணசாமி போராடினார். கமலஹாசன் என்கிற அந்த மாபெரும் கலைஞன் கிருஷ்ணசாமி மீது கொண்ட மரியாதையால் 'சண்டியர்' என்கிற தலைப்பை மாற்றினார். ஆனால், சில மாதங்களுக்கு முன் 'சண்டியர்' என்கிற தலைப்பில் ஒரு படம் வெளியானபோது கிருஷ்ணசாமி எங்கே போனார்?
கமல் நடித்தால் சண்டியர்... புதுமுகம் நடித்தால் மண்டியரா? அதேபோல் இந்த 'கொம்பன்' படத்திலும் கார்த்திக்கு பதிலாக வேறு ஏதாவது புதுமுகம் நடித்திருந்தால் கிருஷ்ணசாமி அமைதியாக இருந்திருப்பார். அப்படித்தானே அர்த்தம்?
இப்போதும் 'கொம்பன்' படத்தில் தவறு இருப்பதாக நினைத்தால், படத்தைப் போட்டுக் காட்டச் சொல்லி தனது மனக் கருத்தை கிருஷ்ணசாமி வெளிப்படுத்தி இருக்கலாமே... அதைச் செய்யாமல் 'கொம்பன்' படத்தைத் தடை செய்யச் சொல்லி சட்டமன்றத்தில் குரல் எழுப்பியும் நீதிமன்றத்துக்குப் போய் தடை கேட்டும் போராட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
திரைப்படங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனம் அல்லவா? இதற்குத்தான் கிருஷ்ணசாமி அரசியலுக்கு வந்தாரா?
'கொம்பன்' படத்தில் தேவேந்திரகுல மக்களை அவமதிக்கும் காட்சிகளும் வசனங்களும் இருப்பதாகச் சொல்லி கிருஷ்ணசாமி போராடி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதிக்கு திமுக கூட்டணியில் இடம் வாங்கியவர், தான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் அவரே போட்டியிட்டார். ஏன் தேவேந்திர குல சமூகத்தில் அறிவார்ந்த பிள்ளைகளே இல்லையா?
அறிவிற்சிறந்த பெருமகன்கள் எத்தனையோ பேர் தேவேந்திர குலத்தில் இருக்க, சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் தான் ஒருவரே சிறந்தவர் என நினைத்த கிருஷ்ணசாமியின் செயல்பாடுதான் அந்த சமூகத்தை அவமானப்படுத்துவதாக இருந்தது? இந்த அவமானத்தைக் கண்டித்து எந்த நீதிமன்றத்துக்குப் போவது?
'கொம்பன்' என்கிற தலைப்பே தவறு என இப்போது சொல்லும் கிருஷ்ணசாமி, பல மாதங்களுக்கு முன்னரே இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டபோது இந்த நாட்டில்தானே இருந்தார்? அப்போதே படத்தின் இயக்குநரையோ கதாநாயகனையோ அழைத்துப் பேசியிருக்கலாமே... இயக்குவதும் நடிப்பதும் நமது தமிழ்ப் பிள்ளைகள்தானே... அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இரண்டாம் தேதி படம் வெளியீடு என்றவுடன் கிருஷ்ணசாமி கொடிபிடித்துக் கிளம்பிவருவது ஏனாம்? அன்றைய தேதியில் 'நண்பேன்டா' படம் வெளியாகும் காரணமா?
'கொம்பன்' படத்தை கிருஷ்ணசாமியுடன் ஒருசேர உட்கார்ந்து பார்க்க நான் தயாராக இருக்கிறேன். படத்தில் அவர் சொல்லும் தவறுகள் நியாயமானதாக இருந்தால், அவர் பக்கம் இருந்து நானும் போராடுகிறேன். ஆனால், அதைச் செய்யாமல் அரசியல் ஆதாயத்துக்காகவும் யாரையோ திருப்தி செய்யவும் 'கொம்பன்' படத்தை தடை செய்யக் கோரும் அவருடைய போராட்டம் தொடர்ந்தால், அது மதிப்புமிக்க ஒரு தலைவர் செய்கிற மலிவான அரசியலாகவே இருக்கும்.
இத்தகைய அர்த்தமற்ற போராட்டங்களைக் கைவிட்டு, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியலுக்கான போராட்டங்களில் கிருஷ்ணசாமி அக்கறை காட்டினால் எங்கள் எல்லோருக்குமான 'கொம்பன்' நிச்சயம் அவர்தான். 'கொம்பன்' என்றால் உயர்ந்தவன் என்கிற அர்த்தமும் அவருக்கே சாலப் பொருந்துவதாக இருக்கும்'' என்று சீமான் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment