Monday, February 21, 2011

அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வேண்டும்! - கார்த்திக்


மதுரை: அதிமுக கூட்டணியில் தங்களுக்கு 10 தொகுதிகள் வேண்டும் என்றார் நடிகரும் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக்.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் அருகே உள்ள கீழக்குயில்குடியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கட்சியின் நிறுவனரும், நடிகருமான கார்த்திக் தலைமை இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அகில இந்திய நாடாளும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த நடிகர் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 175 தொகுதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளன. அந்த தொகுதி மக்களுக்கு இலவச மருத்துவமனைகள், சாலை வசதிகள், சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர்களின் பணமெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணமாக உள்ளது.

அந்த பணத்தை மீட்டு, அதில் ஒரு பகுதியை 234 தொகுதிகளிலும் உள்ள ஏழை- எளிய மக்களுக்கு கொடுத்து 100 சதவீதம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றலாம். இதனால் தமிழகத்தில் ஏழை- எளிய மக்கள் இல்லை என்ற நிலை ஏற்படும். ஏழைகள் வரி கட்ட வேண்டிய நிலை இருக்காது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நல்லவர். வயதில் முதியவர். மதிக்கத்தக்க கூடியவர். ஆனால் மக்கள் குறைகளை நிறைவேற்றுவதில் வல்லவராக அவர் இல்லை.

மத்தியில் அவர் கூட்டணி தர்மத்தைதான் பார்க்கிறார். மக்கள் கடமை செய்வதில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

கூட்டணி பேச்சுவார்த்தை முடியவில்லை...

அ.தி.மு.க.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு எனக்கு அழைப்பு விடுத்தனர். நானும் சென்று அவர்களுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினேன்.

அப்போது அவர்கள் தங்களுடன் பா.ம.க.வருவதால், உங்களுக்கு அதிக எண்ணிக்கையில் சீட்டு தர முடியாது எனவே குறிப்பிட்ட தொகுதியை தருவதாக கூறினர். ஆனால் தற்போது தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டது பாமக. ஆகவே தென் மாவட்டங்களில் எங்கள் கட்சிக்கு முக்கியத்துவம் அளித்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.

நான் நியாயத்தைதான் கேட்கிறேன். அதிகமாகக் கேட்கவில்லை. அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முழுமை பெறவில்லை. முதல்கட்ட பேச்சுவார்த்தைதான் நடந்து உள்ளது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிதான் ஆட்சிக்கு வரும். மக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்..", என்றார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் கார்த்திகை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் முத்துராமலிங்கம், துணை செயலாளர் அய்யப்பன், பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
English summary
Actor Karthik demanded the AIADMK to allot at least 10 assembly seats to his All India Naadalum Makkal Katchi in forthcoming elections.

No comments: