Thursday, February 3, 2011

மக்கள் விரும்பினால் எம்.எல்.ஏ. ஆவேன்: நடிகர் கார்த்திக்






சென்னை, பிப். 2: மக்கள் விரும்பினால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ. ஆவேன் என்று நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான கார்த்திக் தெரிவித்தார். இது குறித்து அவர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: ஊழல் மலிந்து விட்ட மத்திய, மாநில அரசுகள் அகற்றப்பட வேண்டும். சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை நாங்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டோம். 41 தொகுதிகளில் கட்சியைப் பலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தங்கள் கட்சிக்கு இவ்வளவு இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வை அந்தக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் நிர்பந்தம் செய்து வருகின்றன. ஆனால், நாங்கள் அத்தகைய நிர்பந்தத்தை தர மாட்டோம். எங்கள் கட்சியின் எதிர்பார்ப்பு என்ன என்பது பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நன்றாகவே தெரியும். அதன் அடிப்படையில் அவர் நிச்சயம் தொகுதிகளை ஒதுக்குவார். மக்கள் விரும்பினால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆவேன். ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடக்கும் நேரத்தில், பிராமணர்கள் உள்பட அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும். மதுரை சர்வதேச விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் கட்சியின் சார்பில் விரைவில் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றார் கார்த்திக்.

No comments: