Friday, July 29, 2011

புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; ராணுவ வீரர் பரபரப்பு தகவல்

லண்டன்; இலங்கை இறுதிப்போரின் போது சரண் அடைய முன்வந்த புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லும்படி இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தப்பய ராஜபக்ஷே உத்தரவிட்டிருந்ததாக ராணுவ வீரர் ஒருவர் சேனல் 4 தொலை காட்சிக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் பற்றி இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாக சேனல் 4 தொலை காட்சி தொடர்ந்து பல்வேறு தகவல்கள் மூலம் அம்பலப்படுத்தி வருகிறது.
இப்போது ராணுவ வீரர் ஃபெர்ணான்டோ என்பவர் கூறிய தகவலை சேனல் 4 வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;
இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 58-ம் பிரிவு படையணியின் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தார்.
எந்தவழியிலாவது அவர்களைக் கொன்று முடித்து விடுங்கள் என்ற அனுமதியை படைத்தளபதி ஷவேந்திர சி்ல்வாவுக்கு கோத்தப்பய ராஜபக்ஷ வழங்கியிருந்ததாக, இறுதிக்கட்டப் போரின்போது, 58ம் பிரிவு படையணியில் பணியாற்றிய அந்த ராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, ஷவேந்திர சில்வாக்கு வழங்கிய உத்தரவையே படைவீரர்கள் கொலைகளைப் புரிவதற்கான அனுமதியாக எடுத்துக் கொண்டு செயற்பட்டதாகவும் அந்த வீரர் தெரிவித்த தாகவும் சேனல் 4 கூறுகிறது.
பாதுகாப்புக் கருதி தங்களுக்கு தகவல் அளித்த ராணுவ சிப்பாயின் உருவ அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக சேனல் 4 ஆங்கில மொழி பெயர்ப்புடன் அவரது கருத்தை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட இறுதிநாட்களில், இலங்கைப் படையினர் நிராயுதபாணிகளாக இருந்த தமிழ் பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் கோரமாக சுட்டுக் கொன்றதாகவும், பலர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாகவும், நாக்குகள் அறுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டதை தான் கண்டதாகவும் அந்த ராணுவ வீரர் அதர்ச்சிகர தகவலை குறிப்பிட்டுள்ளார்.


மறுப்பு

சர்ச்சைக்குரிய மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தற்போது ஐநாவுக்கான இலங்கையின் பிரதிதூதுவராக உள்ளார். அவரை சந்தித்து சானல் 4 செய்தியாளர் இது குறித்து கேட்டபோது, இலங்கைப் படையினர், கொலைகள் மற்றும் பாலியல் கொடூரங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார்.
பாதுகாப்புச் செயலர் உத்தரவு வழங்கியதாக கூறும் அந்த ராணுவ அதிகாரியின் விபரத்தைக் கூறுமாறும், சேனல் 4 இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறிவிட்டார்.
இலங்கை அரசின் உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து, சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கொல்லப்பட்டதாக கூறப்படும், வெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்பு பட்டதாகவே ராணுவ வீர ரின் சாட்சியம் அமைந்துள்ளதாக சானல் 4 கூறியுள்ளது.
இதற்கிடையே, சேனல் 4 வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லையென்று என்று இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல பி.பி.சி. தமிழோசை வானொலிக்கு அளித்த பேட்டியில் மறுத்துள்ளார்.

No comments: