எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இசை’. இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜும் இணைந்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய், தனுஷ், முருகதாஸ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது, எஸ்.ஜே. சூர்யாவை பற்றிப் பேசும்போது சீரியல் அளவுக்குப் பேச முடியும். 17 ஆண்டுகால நட்பு எங்களுடையது. 'குஷி' படத்தில் அவருடனும் விஜய் சாருடனும் வேலை பார்த்ததைக் கணக்கு பார்த்தால் 'கத்தி' எனக்கு விஜய் சாருடன் மூன்றாவது படம்.
கதாபாத்திரத்தை வடிவமைப்பதில் சூர்யா திறமை அபாரமானது. நான் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போது அவரை மனதில் வைத்துக் கொண்டுதான் உருவாக்குவேன். அவரது இசையார்வம் அளவிட முடியாதது. பிரபலமான பாடல்களை எல்லாம் பாடிக் காட்டுவார். பாடகர்களின் குரல்களை எடுத்துவிட்டு இசையை ஓடவிட்டு தானே பாடுவார்.
'கத்தி' படப்பிடிப்பில் 'இசை' படம் பற்றி விஜய் சாரிடம் கூறினேன். அவர் 'சூர்யாவின் படம் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. எனக்கும் ஆவலாக இருக்கிறது'. என்றார். அதுவும் சத்யராஜ் நடித்த காட்சிகளைப் பார்த்து படம் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது."என்றார்.
விஜய் பேசும்போது, ‘‘எனக்கு 'குஷி'க்கு முன் வாழ்வா சாவா என்ற நிலை இருந்தது. இந்தப்படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் 'குஷி' என்கிற வெற்றிப்படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யா. இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன்.
'குஷி' ரிலீசானவுடன் விக்ரமன் சார் கேட்டார், எப்படி விஜய் இதை ஏற்றுக் கொண்டு நடித்தீர்கள். கதை என்ன இருக்கு? கதையே இல்லையே? என்றார். நான் சொன்னேன் சரிதான் ஆனால் எஸ்.ஜே.சூர்யா என்று ஒருத்தர் இருக்கிறார் என்றேன். அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார். 'நண்பன்' சமயம் 'இசை' படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்’’ என்று மனம் திறந்து பேசி நன்றியுடன் பாராட்டினார்.
No comments:
Post a Comment