Sunday, December 6, 2015

மக்கள் வரிப் பணம் என்ன ஆனது? தமிழக அரசுக்கு கமல் கேள்வி

மக்கள் செலுத்திய வரிப் பணம் என்ன ஆனது என, தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து "ஃபர்ஸ்ட்போஸ்ட்' என்ற இணைய தளத்திற்கு நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டி:
""தமிழகத்தில் தலைநகரான சென்னைக்கே இந்த நிலை என்றால் (கடுமையான வெள்ளப் பாதிப்பு), மற்ற ஊர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பிறர் படும் துன்பத்தை எண்ணி பணக்காரர்கள் வெட்கப்பட வேண்டும்; நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்ப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.
பலத்த மழை காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் நிலைகுலைந்துள்ளது. அரசு நிர்வாகம் முழுமையாகச் செயலிழந்துள்ளது. இதிலிருந்து மீண்டுவர இன்னும் பல மாதங்கள் ஆகும். மக்கள் வரிப் பணம் என்ன ஆனது எனத் தெரியவில்லை. என்னிடம் கருப்புப் பணம் இல்லை. உழைத்துச் சம்பாதித்தப் பணத்துக்கு முறைப்படி வரி செலுத்தி வருகிறேன். இதையெல்லாம் (வெள்ளப் பாதிப்பு) பார்க்கும்போது வரிப் பணம் உரியவர்களுக்குப் போய் சேரவில்லை என்று தெரிகிறது.
மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போது, என்னைப் போன்றவர்களிடம் நிதியுதவியை அரசு எதிர்பார்க்கிறது.
நான் மக்களை நேசிப்பதால் அத்தகைய உதவியை வழங்குவது என் கடமை'' என்றார் நடிகர் கமல்ஹாசன்.

No comments: