Saturday, May 2, 2009


விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளராக நடிகர் கார்த்திக் போட்டியிடுகிறார். இவர் சத்திரபட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் எங்கு சென்றாலும் மக்கள் நல்ல வரவேற்பை கொடுக்கின்றனர். நான் முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். நான் யாருக்கும் எதிரி இல்லை. நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு பிரசாரத்தை துவக்கினேன். திருப்பரங்குன்றத்தில் சொந்தமாக வீடு வாங்கி தங்க உள்ளேன். இந்த தொகுதியில் இதுவரை யாரும் செய்யாததை நான் செய்வேன்.
நான் உயிரோடு இருக்கும் வரை உங்களை யாரும் ஏமாற்ற முடியாது. அனைவரும் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும். சில சுயநலவாதிகள், பிரிவினை வாதிகள் நாட்டை துண்டாட பார்க்கின்றார்கள். நான் இந்த தொகுதியில் நிறைவேற்றப்போகும் திட்டங்கள் குறித்து தேர்தல் அறிக்கையில் தெரிவித்து வீடு வீடாக கொடுப்பேன். இந்தியாவிலேயே முன் மாதிரி தொகுதியாக விருதுநகரை மாற்றுவேன். நான் செய்வதை மட்டும் சொல்வேன்.
தமிழகத்தில் பாலாறு, கங்கையாறு, காவிரியாறு ஓட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் ஒருவர் ரத்த ஆறு ஓட வேண்டும் என்கிறார். இனி நீங்கள் உங்கள் வாழ்க்கையை பற்றி கவலைப்பட தேவையில்லை. இந்த தொகுதியில் கல்வி கற்காத குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவேன். இத்தனை காலம் உங்களை கைவிட்டவர்கள் இந்த தேர்தலில் நீங்கள் கைவிட்டு விடுங்கள். என்னுடைய லட்சியம் உங்களுக்கு சேவை செய்வதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments: