அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதோடு வெற்றி திலகம் இட்டும் வாழ்த்தினர்.
நேற்று மாலை திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே பிரசாரத்தை தொடங்கிய கார்த்திக் திருநகர், தனக்கன்குளம், வேடர்புளியங்குளம், தென் பழஞ்சி, நிலையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்று உங்கள் முன்பு வேட்பாளராக வந்துள்ள நான், நாளை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆகி வாக்களித்த உங்களுக்கு நன்றி சொல்வதற்காக வருவேன். அப்போது உங்கள் கோரிக்கைகளை என்னிடம் எடுத்து வையுங்கள். நிச்சயமாக நிறைவேற்றி தருவேன்.
நான் எப்போதும் உங்கள் வீட்டுப்பிள்ளை. மக்களுக்காக உழைக்கவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். உங்களது அன்பும், ஆதரவும் இருப்பதால்தான் அமைதியான முறையில் பிரசாரம் செய்து வருகிறேன். உங்களை பார்த்த மகிழ்ச்சியில் நானும், என்னை பார்த்த மகிழ்ச்சியில் நீங்களும் உள்ளீர்கள். அதே மகிழ்ச்சியோடு நடைபெறவுள்ள தேர்தலில் ஓட்டுப்பதிவு நாளன்று எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளர் கார்த்திக்குடன் மாநில பொருளாளர் பொன்.முருகன், மதுரை மாவட்ட நிர்வாகி டிராவல்ஸ் முத்துச்சாமி, தென்னவன், நீலகிரி மாவட்ட செயலாளர் ஜான்லியோ, கோவை மாவட்ட செயலாளர் பூபாலன் மற்றும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா, ஜனதா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, திராவிட விழிப்புணர்ச்சி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சென்றனர்.
No comments:
Post a Comment