Monday, December 24, 2012

ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: கலெக்டரின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது- அரசகுமார் பேட்டி

அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் நிறுவனர் அரசகுமார் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 

மதுரையில் கடந்த 20-ந் தேதி அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை கூட்டம் நடந்தது. இதில் ராமதாஸ் உள்பட சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்த கருத்துக்கள் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கலவரத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளதாக கூறி மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

தாழ்த்தப்பட்ட அமைப்பை சேர்ந்த சிலர் பொதுக்கூட்டங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவாகவும், அந்த குடும்ப பெண்களை தரக்குறைவாகவும் விமர்சித்து பேசி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதனால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்துவதை குறை சொல்லக்கூடாது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ஆகும். 

இந்திய அரசியல் சட்டத்தின்கீழ் பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும் புதிய அமைப்பை ஏற்படுத்தும் உரிமை ஆகியவை உள்ளது. சமுதாய கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தின் பிரதிபலிப்பாகும். எனவே டாக்டர் ராமதாசுக்கு கலெக்டர் அனுப்பியுள்ள நோட்டீஸ் ஒருதலை பட்சமானது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்வரை எங்களது போராட்டம் தொடரும். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: