Wednesday, September 11, 2013

மதுரையில் ஜோதி ஓட்டங்களுக்கு தடை: போலீஸ் அறிவிப்பு

முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஜோதி ஓட்டங்கள் எனும் பெயரில் தீவட்டிகளை எடுத்துக்கொண்டு மதுரை மாநகர் வழியாக மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாநகர் காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகர் காவல்துறை ஆணையர் சஞ்சய்மாத்தூர் சார்பில் மாநகர் நுண்ணறிவுப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தலைவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளுக்கு செல்வோரால் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படுகிறது. சட்டவிரோத நடவடிக்கையால் சாதி மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. ஆகவே அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் புதிய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகளுக்குச் செல்வோர் வாடகை வாகனங்களை பயன்படுத்தி மதுரை நகர் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். சொந்த வாகனங்களில் செல்வோரும் 3 வாகனங்களுக்கு அதிகமின்றி தொடர்ந்து செல்லலாம். வாகனங்களில் பயணிப்போர் கோஷங்களை எழுப்பக்கூடாது. சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் இதர சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளிட்டவை தேவர் ஜயந்தி போன்றவற்றுக்கு அனுமதிக்கப்படமாட்டாது. ஜோதி ஓட்டம் எனும் பெயரில் தீவட்டிகளை ஏந்தி மதுரை நகர் வழியாகப் பிற மாவட்டங்களுக்குச் செல்வதையும் அனுமதிக்கப்படமாட்டாது. கூட்டமாகச் செல்வோரில் தனிநபர் யாரேனும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அக்குழுவினரிடமிருந்து சொத்துக்கான இழப்பீட்டுத் தொகை சட்டரீதியாக வசூலிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. .

No comments: