Sunday, September 1, 2013

கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தம்


கச்சத் தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கே சொந்தம், இலங்கைக்கு அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- கச்சத் தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அதை மீட்க முடியாது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1966-ஆம் ஆண்டில் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.பி. பெரிஸ் வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவில் இலங்கைக்கு எந்த உரிமையும் இல்லை. அது ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்று விக்டோரியா அரசி காலத்திலேயே ஆங்கிலேய அரசு அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்த கச்சத்தீவை 1974-ஆம் ஆண்டில் இலங்கைக்கு மத்திய அரசு தாரை வார்த்ததையும், அதன்பின் அங்கு மீன் பிடிக்கும் உரிமை பறிக்கப்பட்டதையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 40 ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தின் நலனைக் கைவிட்டு விட்டு சிங்களர்களை ஆதரிப்பதே மத்திய அரசின் வழக்கமாக உள்ளது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். இந்திய அரசியல் சட்டத்தின்படி நாட்டின் எந்த ஒரு பகுதியையும் அண்டை நாடுகளுக்கு தாரை வார்க்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது. நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்த ஒரு காரணத்தை வைத்தே 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க முடியும். மத்திய அரசின் அணுகுமுறையை மாற்றுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அழுத்தம் தர வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments: