Tuesday, September 24, 2013

தேர்தல் முடிவானது தங்களை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடம்: சீமான் அறிக்கை

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் முடிவானது, தங்களை அழித்த சிங்கள அரசுக்கு தமிழர்கள் புகட்டிய பாடம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கை அரசால் நடத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலில் தமிழ்த்தேச கூட்டமைப்பிற்கு ஈழத்தமிழ் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றியானது, தமிழினத்தை இன அழித்தல் செய்த சிங்கள பவுத்த இன வெறி அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும். ராணுவத்தை பயன்படுத்தி கடும் அச்சுறுத்தல் செய்து, தமிழர்களை வாக்குச்சாவடிக்கு வரவிடாமல் செய்து, அதன் மூலம் தாங்கள் விரும்பும் பொம்மை அரசை ஏற்படுத்த ராஜபக்சே அரசு செய்த முயற்சியை துணிந்து வந்து வாக்களித்து தமிழ் மக்கள் முறியடித்துள்ளனர். இந்தத் தேர்தலின் முக்கிய பலனாக நாம் தமிழர் கட்சி கருதுவது, இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்டு அமைக்கப்படும் ஒரு மாகாண அரசால் தமிழர்களுக்கு எந்த விதமான அரசியல் சம உரிமையும் கிடைக்காது என்பதை உலக நாடுகள் உணர்வதற்காக ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேசம் கூறும் அந்த அதிகாரப் பரவலும், தமிழர்களுக்கு அரசியல் சம உரிமையும் கிடைக்காமல் போனால், அப்போதாவது, தமிழர்களின் அரசியல் விடுதலையை நேர்மையாக ஆதரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை முடிவு செய்ய ஐ.நா. வாயிலாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வரவேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

No comments: