ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:–
தமிழர்களை காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை, நியூட்ரினோ ஆய்வு, அணுமின்நிலையம் பிரச்சினை என ஒவ்வொரு பிரச்சினைகளாக ஆண்டாண்டு காலமாக துரத்திக் கொண்டு வருகிறது. இந்த மண்ணை, இந்த மண்ணுக்கு உரியவர்கள் ஆட்சி செய்யாததால் தான் எந்த பிரச்சினைக்கும் தமிழனுக்கு தீர்வு ஏற்படவில்லை. தமிழனுக்கு ஆளும் அதிகாரம் எப்போது வருகிறதோ அப்போது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு ஏற்படும்.
இலங்கை பகுதியில் சீனாவும், இந்திய பகுதியில் அமெரிக்காவும் போர் கப்பல்களை நிறுத்துகிறது. ஆனால் பாதுகாப்பு அச்சம் இல்லாமல் இதை எல்லாம் இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
ஈழத்தில் பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை எந்த நாட்டு கப்பலும் இலங்கை பக்கமோ, இந்தியா பக்கமோ வந்ததில்லை. நியூட்ரினோ ஆய்வுக்காக மேற்கு தொடர்ச்சி மலையில் 50 ஆயிரம் டன் வெடிமருந்து வைத்து வெடிக்க செய்ய உள்ளனர். இதனால் பல லட்சம் டன் தூசி வெளியாகி நச்சுக்காற்று ஒவ்வொரு தமிழனையும் தாக்கும். இதை தடுக்க யாரும் முன்வரவில்லை.
தமிழர்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு உள்ளது. தமிழர்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வந்தவர்களை எல்லாம், வாழ வைத்தது தமிழர்களின் பிரச்சினை அல்ல. ஆள வைத்தது தான் பிரச்சினை. மண்ணின் மொழி சார்ந்த ஒருவன் என்று ஆட்சி செய்கிறானோ அன்றே தமிழகத்துக்கு விடிவு. இந்த மண்ணில் வாழும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கு மட்டுமே உண்டு என்ற நிலை ஏற்படவேண்டும்.
வருகிற 2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். ஒட்டுமொத்த தமிழர்களின் எழுச்சி ஒத்துழைப்பால் தமிழன் ஆளும் நிலை ஏற்பட வேண்டும். தமிழனை தமிழன் ஆளும் நிலை ஏற்பட நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment