Saturday, February 14, 2015

அனேகன் - படம் எப்படி?

ஒரு அனேகன், ஒரு அனேகள் இருவரும் காதலிக்கிறார்கள் இதுதான் அனேகன்’ படம்.
 
கொஞ்சம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘எனக்குள் ஒருவன்’, ‘மஹதீரா’ என கலந்துகட்டி அடித்தால் ’அனேகன்’. முன் ஜென்மத்தில் இருந்து அடுத்த ஜென்மம் வரைக்கும் காதலர்களாவே சுற்றிக்கொண்டு இருக்கும் தனுஷ், அமைரா தஸ்தூர்; இவர்களுக்கு நடுவில் கடந்த கால வில்லன்கள், ஒரிஜினல் நிகழ்கால டெக்னாலஜி சார்ந்த வில்லன் .. அதற்கு நிகழ்கால தீர்வு என்ன என்பதே ‘அனேகன்’.
பொதுவாக கே.வி.ஆனந்த் படங்கள் என்றாலே, த்ரில்லர் பாக்கெட் நாவல் படித்த உணர்வு இருக்கும். அவருடைய ஃபேவரைட் எழுத்தாளர்கள் சுபாவை தமிழ் சினிமாவுக்குக் கூட்டுக்கொண்டு வந்த புண்ணியம் கே.வி.ஆனந்தையே சேரும். ’கனா கண்டேன்’, ’அயன்’, ’கோ’ மாதிரியான படங்களில் கமர்ஷியலும், த்ரில்லரும் பின்னி பிணைந்து ஓடும் அளவுக்குக் கொடுத்த கே.வி.ஆனந்துக்கு சறுக்கிய படம் ‘மாற்றான்’. கண்டிப்பாக அதை சரிகட்ட வேண்டிய நிலையில், இந்தப் படம் அதை ஈடுகட்டும்.
கூடுதலாக ஆல் இந்தியா ஸ்டார் அட்ராசிட்டி உள்ள தனுஷ் கால்ஷீட் கிடைக்க, காதலை புது வெரைட்டியாக காட்ட முயற்சி செய்துள்ளார்கள். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களிடம் தப்ப முடியுமா? மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் காதலர்களாகப் பிறந்து, பல்வேறு காரணங்களுக்காக உயிரைவிட்ட காதல் ஜோடி, நிகழ்காலத்தில் பல்வேறுத் தடைகளைத் தாண்டி எப்படி ஜெயித்தார்கள் என்பதை சொல்லும் அதே ’நெஞ்சம் மறப்பதில்லை’ ‘மஹதீரா’ கதை! ஆனால், அந்த ஒரிஜினல் வெர்ஷனோடு ஒப்பிடுகையில் இந்த படம் சற்றே ஏமாற்றம்தான்.
தனுஷ்... ஷ்ஷ்ஷ்ஷ்.... யப்பா இந்த பையனுக்குள்ள என்னமோ இருக்கு. தனுஷ் இன்ட்ரோவுக்கு பொண்ணுங்களே விசில் அடிக்கிறாங்க. மனுஷன் நான்கு கெட்டப்களிலும் ஒரு காட்டு காட்டியிருக்கிறார். அந்த காளி கேரக்டர் தாறுமாறு தக்காளி சோறு ரகம். 'டங்கா மாரி ஊதாரி' பாட்டுக்கு விசில் பறக்குது. ஐடி கம்பெனில சிஸ்டம் அட்மினா அவர் வேலை பார்த்தாலும், அந்த தெனாவெட்டு லுக்கு பக்கா மேன்லி. 'இப்பல்லாம் அஸ்வின் இந்தி பொண்ணுங்க கனவுலகூட எக்ஸ்க்ளூசிவ்வா வரான் தெரியுமா?’ இப்படி ஹீரோயின்கிட்ட அவர் பேசுறப்போ இப்போதிருக்கும் பசங்களுக்கு கொஞ்சம் கடுப்பாவும், பொறாமையுமா இருந்தாலும் ஃபேக்ட் ஃபேக்ட் ஃபேக்ட் ஜி தான்.
ஹீரோயின் அமைரா தஸ்தூர்... படம் பூரா உதட்டை குவிச்சு ஒரு முத்தம் அடிக்கையில் என்னா பொண்ணுடா இது... பசங்க மெர்ஸலாகுறாங்க. செம க்யூட்.. இந்த பக்கிய லெமுரியா கண்டத்துல ஏதும் கண்டெடுத்தீங்களா’னு கே.வி.ஆனந்த் கிட்ட கேக்கணும்.

இனி லவ்வர்ஸ் காயம்பட்டா மருந்து கட்டி கட்டு போட்டுக்க மாட்டாங்க. எச்சில் துப்பி காத்துல விட்டே சரி பண்ணிக்குவாங்க. அப்படி ஒரு லவ் படத்தில். பசங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு அமைரா தஸ்தூர் காய்ச்சல்ல சுத்துவாங்க.
என்னதான் இவர்கள் இருவரும் காதலில் கல்லா கட்டினாலும், இருவரையும் தாண்டி நிற்கிறார் ஹேண்ட்சம் ’நவரச நாயகன்’ கார்த்திக், ரொம்ப நாள் கழிச்சு, 'ஏ... ஐ ஆம் ஸ்டில் அலைவ்... என ’இவன தூக்கிட்டு வர மூணு பேரா’ என தனுஷை கிண்டலடிக்கும்போது 'அமிதாப்ப மிஞ்சுன தனுஷால இவர மிஞ்ச முடியலையே'ன்னு ஒரு கணம் தோணுது. 
பின்னணி மியூஸிக்ல பட்டையைக் கிளப்பி இருக்கிறாரு நம்ம ஹாரிஸ். அதுக்காக மனசாட்சியே இல்லாம மரியான் படத்து 'இன்னும் கொஞ்ச நேரம்...'  பாட்டையே அப்படியே சுட்டு 'ஆத்தாடி ஆத்தாடி...' னு ஒரு பாட்டு போட்டிருக்கீங்க பாருங்க. ஹாரிஸ் சார் உங்களை ரங்கூனுக்கு நாடு கடத்திடலாம்னு தோணுது.
கே.வி.ஆனந்த் படம் விஷுவல் ட்ரீட்டா இருக்கும்னு பச்சைக் குழந்தைக்குக்கூட தெரியும். படம் முழுக்க பளிச்னு இருக்கு ஓம் பிரகாஷோட சினிமோட்டோகிராபி. அதுலயும் அந்த ரங்கூன் போர்ஷன் செம அழகு. கம்போடியா, வியட்னாம், பொலிவியா, மலேசியானு தேடித்தேடி லொக்கேஷன்களை அள்ளி போட்ருக்காங்க. சில இடங்கள்ல கிராஃபிக்ஸ் கண்ணை உறுத்துது ஆனாலும் இந்தக் கதைக்கு ஓ.கே மன்னிச்சு விட்டுடலாம்னு தோணுது.
முதல் பாதியில ஜெட் வேகத்துல போகும் படம், இரண்டாம் பாதியில கொஞ்சம் நொண்டி அடிக்குது. ஏகப்பட்ட டீட்டெய்லை படு டீடெய்லா சொல்லி இருக்காங்க. அதுக்காக பயங்கரமா மெனக்கெட்டிருக்காங்க. ஆனா, அதெல்லாம் இப்படி ஒரு கதையினால மனசுல நிக்கலை. குறிப்பா பர்மா போர்ஷன் நுணுக்கமா எல்லா டிப்பார்ட்மென்ட்டும் சேர்ந்து வேலை பார்த்திருக்காங்க. ஆனா, அது படத்துக்கு பெருசா சப்போர்ட் பண்ணல என்பதே உண்மை. 
சரி ’அனேகன்’ படத்தை பார்க்கலாமா? தனுஷ்காக நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். பசங்க அமைரா தஸ்தூர்க்காக பார்க்கலாம், சினிமா ரசிகர்கள் முக்கியமாக கார்த்திக்கின் எவர்யூத் லுக்குக்காகவும் ஆக்டிங்குக்காகவும்  பார்க்கலாம்.
-சினிமா விகடன் குழு-

No comments: