Monday, August 17, 2015

நேதாஜி மாயமான விவகாரம்: பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆவணங்கள் எதுவும் தேடப்பட்டதா? என்பது குறித்து தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 இந்திய வெளியுறவுத் துறையில் கிழக்கு ஐரோப்பாவுக்கான கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.எல். நாராயண், நேதாஜி தொடர்பான மர்மத்துக்கு தீர்வு காண்பது குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் கடந்த 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி திட்டம் ஒன்றை அளித்திருந்தார்.
 அதில், ரஷிய அதிகாரிகளை இந்திய அரசு தொடர்பு கொண்டு, ஸ்டாலின் காலத்து முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆவணங்களை ஆராய்ந்து, அங்கு நேதாஜி தங்கியிருந்தது தொடர்பான ஆவணங்கள் இருக்கின்றனவா? என்பதைக் கேட்க வேண்டும் என்று நாராயண் குறிப்பிட்டிருந்தார்.
 நாராயணனின் இந்தத் திட்டம், வெளியுறவுத் துறை செயலருக்கு முதலில் அனுப்பப்பட்டது. 
 அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, அதுதொடர்பாக எழுதிய பதிலில், அதுகுறித்து அந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியன்று விவாதிக்கும்படி வெளியுறவுத் துறை செயலருக்கும், கூடுதல் செயலர் நாராயணனையும் அறிவுறுத்தியிருந்தார்.
 இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் உரிமை ஆர்வலர் ஒருவர், முன்னாள் கூடுதல் செயலர் நாராயணனின் திட்டத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அவர் எழுதிய குறிப்பின் நகல், வெளியுறவு அமைச்சகத்தால் அழிக்கப்பட்ட நேதாஜி தொடர்பான ஆவணங்கள், தேசிய ஆவணக் காப்பகத்துக்கு மத்திய அரசால் அனுப்பப்பட்ட நேதாஜி தொடர்பான ஆவணங்களின் முழுப் பட்டியல், பிரதமர் அலுவலகத்துக்கும், ரஷியாவுக்கான இந்தியத் தூதராக இருந்த எஸ். ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆகிய விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
 இதற்கு, வெளியுறவு அமைச்சகம் அளித்த முதல் பதிலில், "குறிப்பிட்ட பிரிவில், அந்தத் தகவல் இல்லை' எனத் தெரிவித்தது.
 ஆனால், பின்னர் இதே கேள்விகளை முன்வைத்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் மீண்டும் தகவல் கேட்கப்பட்டது. 
 இதற்கு வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆவணங்கள் எதுவும் தேடப்பட்டதா? என்பது குறித்து தெரிவிக்க முடியாது; 2005ஆம் ஆண்டைய தகவல் அறியும் உரிமைச் சட்டம் 8(1)(ஏ) பிரிவின் கீழ் அத்தகவலை வெளியிட முடியாது' எனத் தெரிவித்து விட்டது.
 

No comments: