Thursday, August 27, 2015

நடிகர் சிவாஜிக்கு அரசு சார்பில் மணிமண்டபம் : ஜெ., அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இன்றைய (ஆக.,26) கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல; அவர் நாட்டுக்கே சொந்தம் என புகழ்ந்துரைத்தார்.
ஜெ., அறிவிப்பு :

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய ஜெ., சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்.
தமிழக நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு நினைவிடம் அமைப்படுவதாக இருந்தது. ஆனால் அப்பணிகள் தாமதமாகி வருவதால் மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. செவாலியே உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற சிவாஜியின் கலை சேவையை போற்றும் விதமாக அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்ட உள்ளது. நடிகர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காரசார விவாதம் :

சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டும் அறிவிப்பிற்கு எம்.எல்.ஏ.,க்கள் கதிரவன், தனியரசு மற்றும் நாராயணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். அப்போது எழுந்த காங்., எம்.எல்.ஏ., விஜயதாரணி, சிவாஜி காங்கிரஸ்காரர் என தெரிவித்தார்.
விஜயதாரணியின் பேச்சுக்கு பதிலளித்த ஜெ., சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. அவர் நாட்டுக்கே சொந்தக்காரர் என தெரிவித்தார். இதனால் அதிமுக மற்றும் காங்., உறுப்பினர்களிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிவாஜி காங்கிரஸ்காரர் இல்லை. அவர் காங்., கட்சியே வேண்டாம் என்று சென்று, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவங்கியவர் என்றார்.

No comments: