Tuesday, January 3, 2012

நார்வே தமிழ்த் திரைப்பட விழா 2012

சர்வதேச அளவில் தமிழ்த் திரைப்படங்களுக்காக நடத்தப்படும் நார்வே தமிழ்த் திரைப்பட விழா, நார்வே தலைநகரான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி தொடங்குகிறது.

ஏப்ரல் 25 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் கலந்துகொள்ளும். அவற்றில் 15 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழர் விருது வழங்கப்படும்.

தமிழ் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் படங்கள், தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் கருத்துகளை உள்ளடக்கிய படங்கள், தமிழ் வரலாறு சார்ந்த படங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

திரைப்படங்களின் கால அளவு மூன்று மணி நேரத்துக்குள்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் படங்கள் 01.01.2011 முதல் 31.12.2011 தேதிக்கு முன் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைத்துப் படங்களும் ஆங்கில சப் டைட்டில்களுடன் இருக்க வேண்டும்.

அதே போல போட்டியில் பங்கேற்க விரும்பும் குறும்படங்கள் 25 நிமிடங்களுக்குள்பட்டதாகவும் இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாததாகவும் இருக்க வேண்டும்.

மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களும் வேற்று மொழியில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட படங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களுடைய திரைப்படங்கள் அல்லது குறும்படங்களின் இரண்டு டி.வி.டி.க்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

படங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.02.2012.

அனுப்ப வேண்டிய முகவரி NORWAY TAMIL FILM FESTIVAL, Tante Ulrikkes Vei 11, 0984 Oslo 9, NORWAY. மேலும் தகவல்களுக்கு 00 47 913 70 728 என்ற தொலைபேசி எண்ணையும் www.ntff.no என்ற இணையதளத்தையும் அணுகலாம்.

No comments: