Tuesday, January 31, 2012

முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் மகன் திருமணம்: கருணாநிதி - மத்திய மந்திரிகள் வாழ்த்து

முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் - ஜெயந்தி தம்பதியின் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கும் சென்னை நொளம்பூரை சேர்ந்த தொழிலதிபர் சார்லஸ்மோகன் - சி.ஷீலா தம்பதியின் மகள் உதயா என்கிற டாக்டர் சி.ராகாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இவர்களின் திருமணம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மங்கள நாணை கருணாநிதி எடுத்து கொடுக்க அதை மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் தொட்டு ஆசிர் வகித்தனர்.

இதையடுத்து மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். மண விழாவில் கருணாநிதி பேசியதாவது:-

மாநகரத்தை விட்டு வானகரம் வரும் வழியிலே கொடிகளையும் வாழ்த்து விளம்பர பலகைகளையும் நான் வியந்து பார்த்தேன். அதில் இருந்து இது மணவிழாவா அல்லது மாநாடா என்று வியந்தேன்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் திருநாவுக்கரசர் எதை செய்தாலும் சிறப்பாக செய்வார். தமிழக துணை சபாநாயகராக இருந்தார். மத்திய மந்திரி பதவிகளையும் வகித்தனர். இப்பவும் எல்லா நிலைகளிலும் தன்னிலை மாறாமல் செயல்படுபவர் திருநாவுக்கரசர்.

எனக்கு இருக்கும் மிக சிறந்த நண்பர்களில் இவரும் ஒருவர். இந்த திருமண விழாவில் நான் கண்டது புதுமையானது. புரோகிதர் வைத்து நடக்கும் திருமணமா? பெரியார், அண்ணா வழியில் நடக்கும் திருமணமா? என்று எண்ணிப் பார்த்தேன். கலப்பு திருமணம் கூட வேறுபாடுகளை களைந்து நடக்கும். மனம் ஒன்றுபட்டு நெஞ்சம் ஒன்றுபட்டு நடக்கும் திருமணமாக இது அமைந்துள்ளது. மணமக்கள் எதிலும் மனம் தளராமல் எந்நாளும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கருணாநிதி பேசினார்.

திருமண விழாவில் முன்னாள் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி, பா.ஜனதா தலைவர்கள் வெங்கையாநாயுடு, இல.கணேசன், சி.பி.ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், கராத்தே தியாகராஜன், கவிஞர் காசி முத்து மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரபாண்டியன், முரளி, நாங்குநேரி ஒன்றிய தலைவர் லக்கான், வாஞ்சிநாதன், வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரோசையா, நடிகர் ரஜினிகாந்த், மத்திய இணை மந்திரி நாராயணசாமி, அண்ணாமலை பல்கலைக்கழக இணை வேந்தர் எம். ஏ.எம்.ராமசாமி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

No comments: