Sunday, January 8, 2012

மாயாவதி சிலைகள் மூடப்படும்: குரேஷி

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள மாயாவதியின் சிலைகள் திரையிட்டு மூடப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது: உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநில முதல்வர் மாயாவதியின் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் திரையிட்டு மூடுவதென தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரம் தேர்தல் நடத்தை விதிமுறைகளோடு தொடர்புடையது என்பதால் மிக விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும். எந்த அரசியல் கட்சிக்கும் அரசியல் ஆதாயம் ஏற்படக் கூடாது என்பதால், தேர்தலின்போது அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள், அரசியல் கட்சிகளின் காலண்டர்கள் கூட அகற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிட அந்த மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தேர்தல் ஆணையக் குழுவிடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. சில அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்தபின்பு முடிவெடுக்கப்படும்.

ஏற்கெனவே மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அரசியல் சார்பு, கறுப்புப் பணம், மதுபானம் மற்றும் பணப் பரிவர்தனை ஆகியன குறித்தும் கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. மதம் சார்ந்த இடங்களில் செய்யப்படும் அவதூறு பிரசாரங்கள் குறித்தும் புகார்கள் வந்துள்ளன. மாநில காவல்துறையினருக்கு பதிலாக மத்தியப் படைகளை பயன்படுத்துமாறும் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.

தேர்தல் முறையாகவும், நடுநிலையோடும் நடைபெறும் என்று அரசியல் கட்சிகளுக்கு ஆணையம் உத்திரவாதம் அளித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை நடுநிலையோடு கடைபிடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7.5 கோடிக்கு கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள், ஹோட்டல்கள் போன்ற இடங்களிலும், ஹவாலா வழிகளிலும் நடைபெறும் பணப் பரிமாற்றத்தை கண்காணிக்கும் பணியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் குரேஷி தெரிவித்தார்.

No comments: