Saturday, January 14, 2012

சென்னை - பெங்களூரு ஆறுவழிப் பாதைக்கு ஜப்பான் உதவி

சென்னை-பெங்களூரு இடையே ஆறுவழிப்பாதை அமைக்க, ஜப்பானிய அரசு உதவி செய்ய முன்வந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், சென்னையிலிருந்து மூன்று மணி நேரத்தில், பெங்களூரு சென்றடையலாம்.

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோஷியுடன், ஜப்பான் போக்குவரத்து துறை அமைச்சர் தக்கேஷி மேத்தா, நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் அதிகாரிகள் கூறுகையில், "சென்னைக்கும், பெங்களூருக்கும் இடையே, ஆறுவழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு நிதி உதவி அளிக்க, ஜப்பான் அமைச்சர் முன்வந்துள்ளார். இந்த ஆறுவழிப் பாதைக்கான திட்ட அறிக்கையை, ஜப்பானிய கம்பெனி ஒன்று தயாரித்து வருகிறது. இரண்டு மாதங்களில் திட்ட அறிக்கை தயாராகிவிடும். அதற்கு பின், மத்திய அரசு எவ்வாறு திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கும். இந்த ஆறுவழிச்சாலை ராணிபேட்டை, சித்தூர், பலமநேர், கோலார் வழியாக, பெங்களூரைச் சென்றடையும்' என்றனர்.

திரிவேதியுடன் சந்திப்பு: ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியையும், ஜப்பான் அமைச்சர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது: ஜப்பானில், "புல்லட்' ரயில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து, ரயில்வே உயர் அதிகாரிகள் கடந்த ஆண்டு, ஜப்பானுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். இந்திய "புல்லட்' ரயில் திட்டங்களுக்கு, ஜப்பான் எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று, ஜப்பானிய அமைச்சர், தக்கேஷி மேத்தா, ரயில்வே அமைச்சர், திரிவேதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டில், ஆறு ரயில் பாதைகளில், "புல்லட்' ரயில் இயக்க ரயில்வே "போர்ட்' முடிவு செய்துள்ளது. இதில், புனே-மும்பை-ஆமதாபாத், கோல்கட்டா-கல்தியா, டில்லி-ஆக்ரா-லக்னோ-வாரணாசி, சென்னை-விஜயவாடா-ஐதராபாத் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. ஆனால், சென்னை- பெங்களூரு-கோவை-திருவனந்தபுரம் பாதையில், "புல்லட்' ரயில் இயக்க நிபுணர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. "புல்லட்' ரயில் திட்டத்தை அமல்படுத்த, ஒரு தனி வாரியம் அமைக்கப் போவதாக, ரயில்வே அமைச்சர் திரிவேதி, ரயில்வே மானியக் கோரிக்கை மீது, லோக்சபாவில் நடந்த விவாதத்திற்கு பதில் அளிக்கையில் அறிவித்திருந்தார். ஆனால், அறிவிப்பு வெளிவந்து ஒரு ஆண்டு ஆகியும், இந்த திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவையில் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இவ்வாறு, ரயில்வே அதிகாரிகள் கூறினார்.

No comments: