Tuesday, January 24, 2012

சங்கரன்கோவில் தொகுதி-தேர்தலைப் புறக்கணிக்க முடிவு

"இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒருங்கிணைத்த அம்பேத்கர் கூட ரிசர்வு தொகுதிகள் ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை வைத்தார். ஆனால் கடந்த 1967 முதல் தொடர்ந்து 45 வருடங்களாக சங்கரன்கோவில் தனித் தொகுதியாகவே இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக சங்கரன்கோவிலை பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டுமென மறத்தமிழர் சேனை உள்ளிட்ட பெரும்பான்மை சமூக இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், தற்பொழுது முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.


இத்தொகுதியில் வாழுகின்ற 17 சதவிகிதமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மீதமுள்ள 83 சதவிகித பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக மக்களின் அரசியல் உரிமைகளை அடியோடு 50,60 வருடங்களுக்கு தகர்த்தெறிவதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் எங்கள் மீது மறைமுகத் தீண்டாமையை திணித்து வருகிறது. 'அரசியல் பொருளாதார நிலைகளில் உயர்வடைய' என்ற காரணத்தினால் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையின் மூலம் கருப்பசாமி நான்கு முறையும் இனி சிவப்புசாமி ஏழுமுறையும் எம்.எல்.ஏ., வாக இருந்துவிட்டால் மட்டும் சமூக நீதி ஏற்பட்டுவிடுமா?



ரிசர்வு தொகுதிகளை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தாழ்த்தப்பட்ட சமூகம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமென்றாலும் ரிசர்வு தொகுதி ஏற்பாடுகளை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் ஒரே தொகுதி நீண்டகாலம் தனித்தொகுதியாகவே இருப்பது நியாயமல்ல. ஒவ்வொரு தேர்தலுக்கும் ரிசர்வு தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் சமூகங்களுக்கிடையே பகைமை ஏற்படாது. தாழ்த்தப்பட்டோரின் அரசியல் தளமும் விரிவடையும்.



தற்போதைய சூழலில் 1947 க்கு பின்பு சுதந்திர இந்தியாவில் பிறந்த தாழ்த்தப்பட்டவர் அல்லாத எந்த குடிமகனும் இந்த தொகுதியில் எம்.எல்.ஏ., ஆக இயலாது என்பது, இது ஒரு சாதி, சமய சார்பற்ற சனநாயக நாடுதான் என்கிற நிலையை கேலிக்குரியதாக மாற்றியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதைவிட கொடுமை இந்த தொகுதியை பொறுத்த வகையில் நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என அனைத்தையுமே தனித்தொகுதிகளாக வைத்திருப்பதுதான்.


தனித்து களம் கண்டாலே வெற்றி பெற்றுவிடக் கூடிய அளவில், எங்கள் இனமக்கள் அதிகமாக பரவி வாழக்கூடிய சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த, அருகருகேயுள்ள இரண்டு தொகுதிகளையும் தொடர்ந்து தனித்தொகுதிகளாகவே வைத்திருப்பதன் மூலம் ஜமீன்களாகவும், மன்னர்களாகவும், போர்ப்படை தளபதிகளாகவும் உலவிவந்த சொந்த மண்ணிலேயே, எங்களை அடிமைகளாக ஆக்க முயலுகிறார்கள். எங்களின் நியாயமான உரிமைகளையும், உணர்வுகளையும் சிதைத்துவிட்டு இடைத்தேர்தலை நடத்திவிடலாம் என்று தேர்தல் ஆணையம் செயல்படுமேயானால் நாங்கள் ஒட்டுமொத்தமாக 'தேர்தலை புறக்கணித்து' வாக்குசாவடிகளுக்கு செல்லமாட்டோம். தேர்தல் நாளன்று வீடுகள் தோறும், கிராமங்கள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி எங்கள் எதிர்ப்புகளை கடுமையாக தெரிவிப்போம்."

THANKS : DEVARTV.COM

No comments: