Monday, February 25, 2013

‘‘புகழையும், பாராட்டையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்’’ இளம் டைரக்டர்களுக்கு, பாரதிராஜா அறிவுரை

‘‘புகழையும், பாராட்டையும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்’’ என்று இளம் டைரக்டர்களுக்கு பாராதிராஜா அறிவுரை கூறினார்.




பாடல் வெளியீடு



டைரக்டர் சுசீந்திரனிடம் உதவி டைரக்டராக இருந்தவர், பி.கார்த்திகை முருகன். இவர் முதன்முதலாக டைரக்டு செய்யும் படம், ‘கரிசல்பட்டியும் காந்திநகரும்.’ இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.



விழாவில் டைரக்டர் பாரதிராஜா கலந்துகொண்டு பாடல் குறுந்தகடை வெளியிட, போலீஸ் ஐ.ஜி. ஆர்.ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். டிரைலரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளர் எஸ்.தாணு வெளியிட, விழாவுக்கு வந்திருந்த டைரக்டர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டார்கள்.



பாரதிராஜா பேச்சு



விழாவில் டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:–



‘‘நான் மேடையில் பேசும்போது, ‘‘என் இனிய தமிழ் மக்களே’’ என்று ஆரம்பிக்கிறேன். அதற்கு நீங்கள் கைதட்டுகிறீர்கள். சிலர் அதை கிண்டல் செய்கிறார்கள். என் மண், என் மக்களை நான் அப்படி கூறாமல், வேறு யார் கூறுவார்கள்?



சோழக்காட்டிலும், கரும்புக்காட்டிலும் கதை கேட்டவன், நான். என் கிராமம், என் மக்கள், என் தெரு, பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு வளர்ந்தவன். நான் ஒன்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலோ, வேல்ஸ் பல்கலைக்கழகத்திலோ படித்தவன் இல்லை. தமிழைப் படித்தவன். தமிழ் மக்களை படித்தவன்.



மிரட்டல்



தமிழும், தமிழனின் அடையாளங்களும் அழிந்து விடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போது இளைஞர்கள் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வந்து மிரட்டுகிறார்கள். புதியவர்கள் விதம்விதமான தளங்களில் நின்று விளையாடுகிறார்கள்.



மெரீனா, நீர்ப்பறவை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களை பார்த்து மிரண்டிருக்கிறேன். கிராமங்களில் இருந்து வருபவர்களால்தான் இப்படி ஈரத்தோடு கதை சொல்ல முடியும்.



அறிவுரை



ஒரு காலத்தில் சினிமா கற்கோட்டையாக இருந்தது. அதன் உள்ளே சாமானியர்கள் நுழைய முடியாது. நான் வந்தபோது, ஏவி.எம். நிறுவனத்தில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டேன். இருங்க...நானே உள்ளே வருகிறேன் என்று சவால் விட்டு, பிற்காலத்தில் அந்த நிறுவனத்துக்கே படம் இயக்கினேன்.



இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை இளைஞர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்த கைத்தட்டல், புகழ் எல்லாமே அந்த நேரத்து போதை அதை அப்போதே மறந்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்க வேண்டும். அதற்குள் மூழ்கிவிடக் கூடாது. 6 முறை தேசிய விருது வாங்கியிருக்கிறேன். அவைகள் எங்கே இருக்கிறது? என்பது கூட தெரியாது. காரணம், இது இறைவன் கொடுத்தது.



நாம் வெறும் குழாய்கள். தண்ணீர் தருவது இறைவன். எனவே அனைத்து புகழையும், பாராட்டையும் இறைவனுக்கு கொடுத்து விடுங்கள். அதை உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.’’இவ்வாறு டைரக்டர் பாரதிராஜா பேசினார்.



டைரக்டர்கள்



டைரக்டர்கள் வி.சேகர், சுசீந்திரன், பாண்டிராஜ், பேரரசு, சீனுராமசாமி, பாலாஜி தரணிதரன் ஆகியோரும் பேசினார்கள். பட அதிபர் தங்கையா முருகேசன் நன்றி கூறினார்.



No comments: