Tuesday, May 6, 2014

இலங்கையின் கோரிக்கையை ஏற்று 16 தமிழ் அமைப்புகளுக்கு இந்தியா தடை: கருணாநிதி, ராமதாஸ் கண்டனம்


இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் 424 பேருக்கு இந்தியா தடை விதித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர்கள் தனித்தனியே வெளியிட்ட அறிக்கை: கருணாநிதி: தமிழர்கள் மீது ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசு ஏன் தான் இப்படித் தொடர்ந்து பகை நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது என்று தெரியவில்லை. தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை அரசு உலக நாடுகளுக்கெல்லாம் வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோளை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தில் இருந்து, மருத்துவ சிகிச்சைக்காக தனது தாயை இந்தியாவுக்கு அழைத்து வந்தபோது தடை விதிக்கப்பட்ட 424 பேரில் ஒருவர் இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மனிதாபிமானற்ற செயலும் நடந்துள்ளது. இலங்கையின் தடை உத்தரவு கனடாவில் செல்லாது என்று அந்நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரிட்டனும் அவ்வாறே தனது எதிர்ப்பினை ஏற்கெனவே தெரிவித்துவிட்டது. ஆனால், இந்திய அரசு மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ராமதாஸ்: ஈழத்தமிழர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போது தமிழினத்துக்கு எதிராக மீண்டும் ஒரு துரோகத்தைச் செய்துள்ளது. இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் 16 தமிழ் அமைப்புகளுக்கும், அவற்றுடன் தொடர்புடைய 424 செயல்பாட்டாளர்களுக்கும் இந்திய அரசு தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை எள் என்றால் எண்ணெயாக மாறி நிற்கும் இந்திய அரசு, மறு கேள்வியே எழுப்பாமல் இந்த 16 அமைப்புகளுக்கும், அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் தடை விதித்து ஆணையிட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோதச் செயலாகும். இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக எந்த ஓர் ஆதாரத்தையும் இலங்கை அரசால் வெளியிட முடியவில்லை. உண்மையில் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம், குளோபல் தமிழ் ஃபோரம், உலகத் தமிழ் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பல இலங்கை இனப் படுகொலைக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகின்றன. ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்திலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அவை குரல் கொடுத்தன. இந்நிலையில் அந்த அமைப்புகள் தீவிரவாத அமைப்புகளாக செயல்படுவதாகக் கூறி, இந்தியா தடை செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும். இலங்கையின் கோரிக்கையை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டன. எனவே, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீதான தடையை உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

No comments: