Thursday, May 8, 2014

ஜல்லிக்கட்டுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


தமிழர்களின் பாரம்பரியம் மிக்க விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமின்றி, மாடுகள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் "ரேக்ளா' பந்தயம் உள்ளிட்ட போட்டிகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், "ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு முழுமையான தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல வாரியம், விலங்குகள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மக்கள் (பிஇடிஏ) அமைப்பு ஆகியவை சார்பில் 2007-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, விலங்குகள் நல வாரியம் ஆகியவை சார்பில் கடந்த சில ஆண்டுகளாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வழக்கு நிலுவையில் இருந்தபோது, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ஆகியவற்றுக்கு பண்டிகைக் காலங்களில் நீதிமன்றம் மூலம் இடைக்கால அனுமதி பெற்று நிபந்தனைகளுடன் போட்டிகள் நடத்தப்பட்டன. இந் நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் புதன்கிழமை அளித்த தீர்ப்பின் விவரம்: "ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. காட்டுமிராண்டித்தனமாக அவை கொடுமைப்படுத்தப்படுவது விலங்குகள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். ஆகவே, தமிழ்நாடு, மகராஷ்டிரம் உள்பட நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளையோ, ரேக்ளா பந்தயங்களில் மாடுகளையோ பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. காளைகள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: காளைகள் உள்ளிட்ட விலங்குகளின் நலன்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதை உறுதிப்படுத்த வேண்டியது மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை, விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றின் கடமையாகும். விலங்குகள் பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உரிய நபர்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். விலங்குகள் துன்புறுத்தப்படாமல் இருக்க இரு துறைகளும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். விலங்குகள் நல வாரியத்துக்கு அறிவுறுத்தல்: விலங்குகளை மோதலில் ஈடுபடுத்துவது அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாக்கி விளையாட விடுவது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது விலங்குகள் நல வாரியத்தின் பொறுப்பாகும். விலங்குகள் மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கல்வியை போதிக்க விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு வேண்டுகோள்: விலங்குகளை கொடுமைக்கு ஆளாக்குவோர் அல்லது துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. அதேபோல, விலங்குகள் உரிமைகள் விவகாரத்தை அரசியலமைப்பு உரிமைக்கு இணையாக தரம் உயர்த்தவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் விலங்குகள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை இச் சட்டம் மூலம் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். "தமிழ்நாடு சட்டம் செல்லாது': விலங்குகள் கொடுமைச் சட்டத்தையும், தற்போது நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் அமல்படுத்துவதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விலங்குகள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறும். எனவே, அரசியலமைப்புச் சட்டம் 254(1) பிரிவுக்கு எதிராக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் உள்ளதால் அதைச் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்கிறது. விலங்குகள் மீதான கொடுமைச் சட்டப் பிரிவுகளை முழுமையாக அமல்படுத்துவது தொடர்பாக விலங்குகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட ஆர்வலர் அமைப்புகளுடன் விலங்குகள் நல வாரியம் ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேற்கண்ட அம்சங்களைக் கவனத்தில் கொண்டு, ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நீதிமன்றம் ரத்து செய்கிறது. மேலும், ரேக்ளா பந்தயம் போன்ற விலங்குகள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் போட்டிக்குத் தடை விதித்த பாம்பே உயர் நீதிமன்றத் தீர்ப்பு, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் விலங்குகள் துன்புறுத்தப்படும் வகையில் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு 2011-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது' என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தடைக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிககட்டு உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். நேற்று சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பால் அலங்காநல்லூர் உள்ளிட்ட மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், காளைகளை வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடிவீரர்கள், கிராம பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் உள்ளிட்ட கடை வீதிகளில் ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கறுப்புக் கொடியேற்றினர். இதுகுறித்து அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்தவரும், பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருபவருமான பேரூராட்சி கவுன்சிலர் கோவிந்தராஜ் கூறியதாவது:- “கடந்த ஆட்சியின்போது இதைபோல் ஜல்லின்கட்டிற்கு தடைவிதித்த போதெல்லாம் அப்போதைய தி.மு.க. அரசு உடனடியாக தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்தது. அதேபோல் தற்போது உள்ள மாநில அரசும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசை வலியுறுத்தவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஜல்லிக்கட்டிற்காக வருடம் முழுவதும் ஜல்லிக்கட்டு காளைகளை பெற்ற பிள்ளைகளை விட மேலாக பேணிக்காத்து வருகிறோம். விலங்குகள் நலவாரியம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக சொல்லும் கோரிக்கை முற்றிலும் அபத்தமானது. மனிதர்கள் உண்ணும் உணவைவிட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சத்தான உணவு, பராமரிப்பு, பாதுகாப்பு, பயிற்சி உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் காளை வளர்ப்போர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மிருகவதை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவே விலங்குகள் நலவாரியம் தங்களது பிடிவாதத்தை தளர்த்தி தமிழர்களின் உணர்வுக¢கு மதிப்பளித்து, பாரம்பரியமிக்க வீரவிளையாட்டை பாதுகாக்க வழிவகை செய்யவேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார். குறவன்குளம் மாடுபிடி வீரர் நாகராஜன், சிதம்பரம் ஆகியோர் கூறியதாவது:- “கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக பங்கெடுத்து வருகிறேன். வெளிநாடுகளில் காளைகளை மொத்தமாக அவிழ்த்துவிட்டு ஈட்டி போன்ற கூர்மையான ஆயுதங்கள் மூலம் குத்தி துன்புறுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா வித்தியாசமானது. வாடிவாசலிலிருந்து வெளியேறும் காளைகளை கும்பலாக அடக்காமல் தனி ஒரு ஆளாய் காளைகளை அடக்கி வீரத்தை வெளிப்படுத்துகிறோம். இதில் யாருக்கும் எந்தவித துன்புறுத்தலும், மிருகவதையும் கிடையாது. எதிர்பாராமல் நடைபெறும் ஒரு சில சம்பவங்களுக்காக உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவிற்கு தடைவிதிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. எனவே தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற உச்சநீதிமன்ற தடையை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நீக்கவழிகாண வேண்டும். ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்கப்பட்ட இந்த நாளை ஒரு துக்க நாளாக கருதுகிறோம். ஜல்லிக்கட்டிற்கான தடையை மத்திய மாநில-அரசுகள் உடனடியாக தலையிட்டு நீக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு காளைகள் இனம் அழிந்துவிடும். வரும் காலத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை அருங்காட்சியகங்களில் அடையாளச் சின்னமாகத்தான் பார்க்கமுடியும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: