Tuesday, June 7, 2011

உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க 11வது உலக மாநாடு பிரான்சில்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை நடாத்தும் 11 வது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு செப்டம்பர் 24ம், 25 ம் திகதிகளில் பிரான்சில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய மாநாட்டு அமைப்பாளரும் செயலாளர் நாயகமுமாகிய துரை கணேசலிங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய செயலாளரும் மாநாட்டின் துணைத் தலைவருமாகிய இ.ராஜசூரியர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளைத் தலைவரும் மாநாட்டு தலைவருமாகிய விசு செல்வராசா, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய பிரான்ஸ் கிளை செயலதிபரும் மாநாட்டின் செயலாளருமாகிய ம. இரவீந்திரநாதன் ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்:
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் கிளையினால் இவ் ஆண்டு புரட்டாதி மாதம் 24, 25 ம் திகதிகளில் திருவள்ளுவர் ஆண்டு 2042 சனி ஞாயிறு இரு தினங்களில் பிரான்ஸில் எவ்றி மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இவ் இயக்கம் தென் ஆபிரிக்காவை தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது.
இவ் இயக்கத்தின் கிளைகள் 42 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 1977ல் சென்னையிலும். 1980ல் மொரீசியசிலும் 1985ல் சேலத்திலும்.1989ல் மலேசியாவிலும்.1992ல் அவுஸ்ரேலியாவிலும். 1996ல் கனடாவிலும்.

1999ல் சென்னையிலும். 2001ல் தென் ஆபிரிக்காவிலும். 2004ல் புதுவையிலும்.2007ல் மலேசியாவிலும் ஆக பத்து உலகத்தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு 11வது வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ளது.
உலகத் தமிழர் மொழி, பண்பாட்டு. வாழ்வியல் மேம்பாடு என்ற கருப்பொருளில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இதுவரை இவ் இயக்கம் உலகளாவிய மாநாடுகளின் மூலம் தமிழர் கலைகள் பண்பாடு ஊக்குவிப்பு.தமிழ் ஆண்டு, தமிழ் மொழிக்கல்வி. தமிழர் வரலாற்று ஆவண சேமிப்பு. தூய தமிழ் வழக்கு. தமிழ் செம்மொழி உருவாக்கம். உலகத்தமிழர் ஒற்றுமை பேணல்.முதலான விடயங்களில் பல சாதனைகளை நிலை நாட்டியுள்ளது.
இந்த நோக்கத்துடன் தமிழ் வழி இறை வழிபாடு. தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல்.தமிழர் இறையாண்மை. தமிழ்ப்பாதுகாப்பு. தமிழ்க்கலை மீட்பு.
தமிழ்க் கல்வி. தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு.மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றுத் தேடல்கள்.எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள். தமிழ் ஊடகங்கள். போன்ற விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மாநாட்டு ஆய்வுகளும் தமிழ் அறிஞர்கள் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும்.
மாநாட்டில் தமிழ் மொழி. தமிழ் இனம். தமிழ்ப்பண்பாடு. தொடர்பான ஆவணக்காட்சியும். தமிழர் வாழ்வியல் வரலாறு. மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள். இறுவெட்டுக்கள். ஒலி இழை நாடாகள். நிழற்படங்கள். முதலியன கண்காட்சிக்கு வைக்கப்படும். அத்துடன் மா நாட்டுக் கருப்பொருளை ஒட்டி உலகளாவிய கட்டுரைப் போட்டி. கவிதைப் போட்டி. என்பன இடம் பெறுவதுடன் உலகளாவிய அளவில் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.
உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் இலங்கை இந்திய நாடுகளில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செய்ற்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தை திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டில் பல நாட்டு அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள்.
எனவே வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் மா நாட்டு மலருக்கு ஆக்கங்களைத்தர விரும்புவோர்கள். கண்காட்சிகளில் இணைந்து கொள்ள விருபுவோர்கள். அனைவரும் வரும் 31.07.2011 க்கு முன்பாக மாநாட்டுப்பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்குமின்அஞ்சல்
Imtc1974@yahoo.com
mictefr@hotmail.fr
ravien1952@live.fr

No comments: