Wednesday, June 8, 2011

ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்தது: 23பேர் உடல்கருகி பலி

வேலூர்: சென்னையிலிருந்து திருப்பூருக்கு நேற்று இரவு கே.பி.என்., ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இரவு 11.30 மணியளவில், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கித்தில் இருந்தனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த காவேரிபாக்கம், அவலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற பஸ் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ், ரோட்டை ஒட்டியுள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்ஸின் டீஸல் டேங்க் வெடித்ததில் பஸ் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது. இரவு நேரம் என்பதால், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள், பஸ் முழுவதும் மளமளவென தீ பரவியது. ஆம்னி பஸ் என்பதாலும், இருந்த ஒரு கதவும் தாழிடப்பட்டு, ஜன்னல்களும் மூடபட்டிருந்ததால், பஸ்சிலிருந்து பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

தீ பரவி புகை மூட்டம் சூழ்ந்ததால், என்ன ஆனது என்றே தெரியாமல், பலரும் மயங்கினர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததை பார்த்த, மற்ற வாகனங்களும் ரோட்டில் நிறுத்தப்பட்டன. அதில், இருந்தவர்கள் போலீஸ், மற்றும் அவசர ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், தீயின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பஸ்சுக்குள் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. அதனால், மூன்று குழந்தைகள் உட்பட 23 பேர் உடல் கருகி பலியாகினர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்து ஏற்பட்டவுடன் எச்சரிக்கை செய்து, உரிய நடவடிக்கை எடுக்காததும், இரவு நேரம் என்பதாலும், இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என தெரிகிறது. இவ்விபத்தில் ஒட்டுமொத்தமாக 23க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

No comments: