Friday, June 29, 2012

அமைச்சர் மகன் விபத்தில் மரணம்: 400 வேகத்தடைகள் சீரமைப்பு- மாநகராட்சி நடவடிக்கை


சென்னை பாரிமுனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு மகன் தமிழ்மணி வேகத்தடையில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடைகளை சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. நகர் முழுவதும் 400 வேகத்தடைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வேகத்தடைகள் பெரும்பாலும் இந்தியன் ரோடு காங்கிரஸ் விதிமுறைப்படி அமைக்கப்படவில்லை. வேகத்தடைகள் 3.7 மீட்டர் அகலத்திலும் உயரம் 10 சென்டி மீட்டருக்கு மிகாமலும் அமைக்கப்பட வேண்டும்.
 
மேலும் வேகத்தடை பளிச்சென்று தெரியும்படி வர்ணம் பூசப்பட வேண்டும். இரவில் ஒளிரும்படி விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். வேகத்தடைக்கு முன்பு 40 மீட்டர் தூரத்தில் வேகத்தடை இருப்பது  பற்றி எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகள் பின் பற்றப்படவில்லை என்று கூறப் படுகிறது. பல இடங்களில் அனுமதி இல்லாமலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
 
இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-
 
பல இடங்களில் உயரமாக இருந்தால்தான் வாகனங்கள் மெதுவாக செல்லும் என்பதற்காக உயரமாக வேகத்தடைகளை அமைக்கும்படி பொது மக்களே வலியுறுத்து கிறார்கள். உட்புற சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கட்டப்படுத்த வேகத்தடைகள் வைக்க பொது மக்களே கோரிக்கை விடுக்கிறார்கள்.
 
பொதுவாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து வேக கட்டுப்பாடுடன் வாகன ஓட்டிகள் சென்றாலே வேகத்தடையால் விபத்து ஏற்படாது. தற்போது நகரில் உள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. உயரமாக இருக்கும் வேகத்தடைகள் கண்டறியப்பட்டு சீர் செய்யப்படும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: