Friday, June 29, 2012

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் இருப்பவர்களை விடுவிக்காவிட்டால் போராட்டம்: சீமான் அறிவிப்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

மற்ற முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 பேர் இன்றுடன் 15 நாட்களாக பட்டிணிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் 9 பேரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கை பற்றிப் பேச காவல் துறை உயர் அதிகாரிகளோ தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையினரோ மாவட்ட நிர்வாகமோ இதுவரை வரவில்லை. செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மீது க்யூ பிரிவு தொடர்ந்த வழக்குகளில் இருந்தெல்லாம் அவர்கள் பிணைய விடுதலை பெற்றுள்ளார்கள். அவ்வாறு இருந்தும் அவர்களை காலவரையின்றி நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே தடுத்து வைத்திருக்கின்றனர். 

சட்ட ரீதியாக தங்கள் மீதான வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் இப்படி நீண்ட காலமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்தும், தங்களை இதர முகாம்களில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருடன் வாழ அனு மதிக்குமாறு கோரியும் இவர்கள் பலமுறை பட்டிணிப் போராட்டம் நடத்தியுள்ளனர். 

அரசுடன் பேசி விடுவிப்போம் என்று ஒவ்வொரு முறையும் உறுதிமொழி அளித்து அவர்களின் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் முடித்து விட்டு, பிறகு ஒப்புக் கொண்டதை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்து வருகிறது. இந்த நிலையில்தான் அவர்கள் மீண்டும் பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே இந்த உண்மைகளை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, சிறப்பு முகாம்களில் உள்ளோர் அனைவரையும் விடுவித்து, மற்ற முகாம்களில் அவர்கள் வாழ அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. 

நம் சொந்தங்களின் நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் சிறப்பு முகாம்களின் முன்னால் நாம் தமிழர் கட்சி மறியலில் ஈடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: