Friday, August 10, 2012

20 ஓவர் உலக கோப்பை: இந்திய அணியில் இடம்பிடித்தார் யுவராஜ்சிங்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18-ந்தேதி முதல் அக்டோபர் 7-ந்தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
 
ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினர் மும்பையில் கூடி வீரர்களை தேர்வு செய்தனர். புற்றுநோயில் இருந்து குணமடைந்த அதிரடி வீரர் யுவராஜ் சிங் 15 வீரர்கள் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ளார். நீண்டகாலமாக அணியில் இடம்பெறாத தமிழக வீரர் பாலாஜி, ஹர்பஜன்சிங் ஆகியோரு, 20 ஓவர் உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
 
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி விவரம் பின்வருமாறு: டோனி (கேப்டன்), சேவாக், அஷ்வின், யுவராஜ் சிங், கோலி, ரெய்னா, காம்பீர், ரோகித் ஷர்மா, ஹர்பஜன் சிங், இர்பான் பதான், பாலாஜி, ஜாகீர் கான், திண்டா, மனோஜ் திவாரி மற்றும் பியுஷ் சாவ்லா.
 
இதேபோல நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியும் இன்று தேர்வு செய்யப்பட்டது. ஆஸ்திரேலிய தொடரில் மோசமாக ஆடியதால் மூத்த வீரர் வி.வி.எஸ்.லட்சுமண், நியூசிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லட்சுமண் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
 
டிராவிட் ஓய்வு பெற்றுள்ளதால் அவர் இடத்தில் புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல ரெய்னா, ரகானே, இஷாந்த் ஷர்மா, ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய தொடரில் அணியில் இடம்பெற்றும், போட்டிகளில் களமிறக்கப்படாத ரோகித் ஷர்மாவுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை.
 
நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி விவிரம் பின்வருமாறு: டோனி (கேப்டன்), சேவாக், காம்பீர், சச்சின், பியூஷ் சாவ்லா, புஜாரா, லட்சுமண், ரெய்னா, ரகானே, இஷாந்த் ஷர்மா, கோலி, அஷ்வின்,  உமேஷ் யாதவ், ஜாகீர் கான், மற்றும் பிரக்யான் ஓஜா. 
 
இந்த மாதம் இந்தியா வரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் (செப்டம்பர் 8 மற்றும் 11-ந்தேதி) விளையாடுகிறது.

No comments: