Friday, August 10, 2012

தமிழ் இனத்தவர் அனைவரும் டெசோ மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: சீமான் அறிக்கை

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரித்து, அதனை ஒழிக்கும் போர் என்று கூறி, நமது சொந்தங்கள் ஒன்றே முக்கால் லட்சம் பேரை சிங்கள பேரினவாத அரசு கொன்று குவித்தது. விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்துவிட்டது என்று 2009ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி அறிவித்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

போர் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், போரினால் இடம் பெயர்ந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகவுள்ள மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் இதுவரை குடியமர்த்த வில்லை. மாறாக, தமிழர் வாழ்ந்த பூமியில் 30 விழுக்காட்டிற்கு மேல் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கில் சிங்களர்கள் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழர்களின் விளை நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இப்படி தமிழீழமே சிங்கள காலனியாக மாற்றப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, போர் முடிந்த பின்னரும் தமிழர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை பல்வேறு வகைகளில் இனவெறி ராஜபக்ச அரசு மேற் கொண்டு வருகிறது. இதனை பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் ஆதாரங்களுடன் வெளியிட்டன. 

இதைப்பற்றியெல்லாம் 3 ஆண்டுக்காலத்தில் வாய் திறக்காத தி.மு.க. தலைவர் கருணாநிதி, டெசோ அமைப்பிற்கு மீண்டும் உயிரூட்டி, தமிழீழ விடுதலைக்கு தனது உயிர், பொருள், ஆவி அனைத்தையும் அளிப்பேன் என்றும், தான் மரணிப்பதற்கு முன்னர் தமிழீழம் மலர்வதை பார்க்க விரும்புவதாகவும் கூறினார். 

ஆனால் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் சந்தித்துப் பேசிய பிறகு, ஈழ விடுதலை தொடர்பான தீர்மானம் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்படாது என்று அறிவித்தார். இப்போது, இந்த மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளார். ஈழத்தில் வாழும் நமது சொந்தங்கள் இனப்படு கொலை செய்யப்பட்டதற்கும், இன்று வரை இன அழித்தலுக்கு ஆளாக்கபட்டு வருவதற்கும் இலங்கை அரசு காரணமில்லையா? இன்றைக்கு நீங்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு என்று நடத்துகிறீர்களே, அப்படியானால், ஈழத்தமிழர்களின் வாழ்விற்கு அந்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது தானே பொருள்?. 

அதற்குக் காரணம் இலங்கை அரசும், அதன் இனவெறி ராணுவமும் தானே? உண்மை இவ்வளவு தெளிவாக இருக்க, டெசோ மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?. 

தமிழினத்தை திட்டமிட்டு அழித்தொழித்த ராஜபக்சவுக்கு என்றைக் காவது தி.மு.க. நெருக்கடி கொடுத்துள்ளதா? அப்படி நெருக்கடி கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி கூட்டமோ, மாநாடோ நடத்தியுள்ளதா தி.மு.க.?. போர் முடிந்த பிறகு, வன்னி முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களின் நிலையறிய சென்ற மக்களவை தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்களைக் கொண்டக் குழு, மகிந்த ராஜபக்சவை சந்தித்து விருந்துண்டு, அவர் அளித்த பரிசை கனிமொழி உள்ளிட்ட உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டு வந்ததைத் தவிர, வேறு எதைச் சாதித்தது தி.மு.க?. 

இந்த டெசோ மாநாடு, ஈழத் தமிழரின் விடுதலையையோ அல்லது அவர்களின் நல் வாழ்விற்காகவோ நடத்தப் படவில்லை, அது முழுக்க முழுக்க தி.மு.க.வின் அரசி யல் செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தும் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகும். இதில் ஈழத்தில் இருந்து எவர் கலந்துகொண்டாலும் அது தமிழினத்திற்குச் செய்யும் துரோகமாகவும், சுய நல அரசியலுக்கு துணைபோவ தாகவுமே அமையும் என்பதை நாம் தமிழர் கட்சி சுட்டிக்காட்டுகிறது. எனவே தமிழினத்தவர் அனைவரும் டெசோ மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: