Friday, August 24, 2012

சிவகாசி ஆக்கிரமிப்பு பிரச்சினை: முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரிய நடவடிக்கை எடுப்பார்- நடிகர் கார்த்திக் பேட்டி

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள சிறுகுளம் கண்மாயில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். அது கண்மாய் பகுதி என்றும், அதனால் நீர் சேகரிப்புக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்கள். அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. 

ஆனால் அவசரமாக அகற்ற வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்படவில்லை. கோர்ட்டு உத்தரவை நான் மதிக்கிறேன். அங்கு வசிக்கும் மக்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரப்படும் என்று ஏற்கனவே இருந்த கலெக்டர் கூறியுள்ளார். 

தற்போது திடீரென்று வீடுகளை இடித்தால் அந்த மக்களின் நிலை என்ன என்பதை அரசும், அதிகாரிகளும் சிந்திக்க வேண்டும். அந்த பகுதி மக்களின் அழைப்பை ஏற்றுத்தான் நான் மதுரை வந்துள்ளேன். ஆனால் அந்தபகுதிக்கு நான் சென்றால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி என்னை தடுக்கிறார்கள்.

நான் அங்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது. கைது செய்வோம் என்று மிரட்டவும் முடியாது. என்னை கைது செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? பிரச்சினைகள் வரக்கூடாது என்பதுதான் எனதுஆசை. அதற்காகத்தான் அமைதியான முறையில் பேசிக் கொண்டு இருக்கிறேன். 

அங்கு செல்வதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் பேசுவதும் தவறு என்றால் அதனை நான் தொடர்ந்து செய்வேன். இந்த பிரச்சினை குறித்து தமிழக முதல்-அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளேன். அவர் உரிய முறையில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். 

மக்களுக்காகத்தான் அரசு என்பதை அனைவரும் உணர வேண்டும். அரசியல் கட்சிகளில் நாடு பற்றி சிந்திப்பவர்களைவிட அடுத்த ஆட்சி குறித்து சிந்திப்பவர்கள்தான் அதிகம் உள்ளனர். எல்லாக் கட்சிகளும் அப்படித்தான் இருக்கின்றன. 

இவ்வாறு அவர் கூறினார். 

பேட்டியின்போது கட்சியின் தலைமைக் கழக நிர் வாகிகள் பாலமுருகன், துர்க்கலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் சாந்திபூஷன், கார்த்திக் ராஜன், வீரண ராஜூ, வெயில்முத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

No comments: