Sunday, January 24, 2016

நேதாஜி ரகசிய ஆவணங்கள்: பிரதமர் மோடி வெளியிட்டார்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மத்திய அரசிடம் உள்ள 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பொதுமக்கள் பார்வைக்காக பகிரங்கமாக வெளியிட்டார்.
 16,600 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணங்கள், கடந்த 1956ஆம் ஆண்டு முதல் கடந்த 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு உள்பட்டவையாகும். இதில், 36 ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்திடமும், 18 ஆவணங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், 46 ஆவணங்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும் இருந்தவை.
 தில்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா, பாபுல் சுப்ரியோ ஆகியோர் முன்னிலையில் 100 ஆவணங்களையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பின்னர், தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்ட அந்த ஆவணங்களை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் சுமார் அரை மணி நேரம் பார்வையிட்டனர். அப்போது நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
 மாதந்தோறும் 25 ஆவணங்கள் வெளியீடு: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசிடம் இருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களில் 100 ஆவணங்களை வெளியிட்டதையடுத்து, தில்லி தேசிய ஆவணக் காப்பகமும் தன்னிடம் இருக்கும் ஆவணங்களில் மாதந்தோறும் 25 ஆவணங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
 மேலும், நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவதற்கு என்று பிரத்யேக இணையதளத்தையும் ஆவணக் காப்பகம் தொடங்கியுள்ளது.
 நேதாஜியின் குடும்பத்தினர் வரவேற்பு: நேதாஜி தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட்டிருப்பதை நேதாஜியின் குடும்பத்தினரும், நேதாஜியால் தொடங்கப்பட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி செயலாளர் ஜி. தேவராஜன், பொதுச் செயலாளர் தேவவிரத விஸ்வாஸ் ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.
 இதுகுறித்து நேதாஜியின் பேரனும், அந்தக் குடும்பத்தினரின் செய்தித் தொடர்பாளருமான சந்திரகுமார் போஸ் கூறுகையில், "பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை நாங்கள் இதயப்பூர்வமாக வரவேற்கிறோம். இன்றைய தினம், இந்தியாவின் வெளிப்படைத்தன்மை தினமாகும்' என்றார்.
 நேதாஜியின் மற்றொரு பேரன் சூர்யகுமார் போஸ் கூறுகையில், "நேதாஜி தொடர்பான மர்மம் விலகுவதற்கு இந்தியாவிடம் இருக்கும் உளவுத் துறை கோப்புகளும், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருக்கும் உளவுத் துறை கோப்புகளும் வெளியிடப்பட வேண்டும்' என்றார்.
 நேதாஜியின் உறவினர் சுகதா போஸ் கூறுகையில், "ஜப்பானிடம் இருக்கும் ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் ஷின்úஸா அபேயுடன் பிரதமர் மோடி பேச வேண்டும்' என்றார்.
 காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: முன்னதாக, தில்லியில் சந்திரகுமார் போஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் ஆட்சியின்போது முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டினார்.
 100 ரகசிய ஆவணங்களையும் படித்துப் பார்த்து, நாட்டு மக்களிடம் நேதாஜி குறித்து தெரிவிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் நேதாஜியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தகவலை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
 பிரதமர் மோடி மரியாதை: முன்னதாக, நேதாஜியின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவுகள் மூலம் அவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் அந்த பதிவுகளில், "நேதாஜியின் பிறந்த தினமான இன்றைய தினத்தில், அவரை நினைவுகூர்கிறோம். அவரது தைரியம் மற்றும் தேச பக்தியை இந்தியர்கள் பல தலைமுறைக்கும் நினைவு கூர்வார்கள். நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் இன்றைய தினம், இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பான தினமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
1995-இல் நேதாஜியின் மரணத்தை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
 கடந்த 1945ஆம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார் என்பதை அதற்கு 50 ஆண்டுகள் கழித்து அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு ஒப்புக்கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.
 இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்களில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
 விமான விபத்து நிகழ்ந்ததற்கு 5 நாள்களுக்குப் பிறகு, நேதாஜியைப் போர் குற்றவாளி என்று அறிவித்தால் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகள் பற்றி பிரிட்டன் அரசு விவாதித்தது. எனினும், நேதாஜி வெளிநாட்டில் இருக்கும் பட்சத்தில் அவரை ஒப்படைக்குமாறு கோர வேண்டாம் என்று முடிவு செய்தது.
 இதுதொடர்பாக, அப்போதைய இங்கிலாந்து பிரதமர் அட்லீயின் அமைச்சரவையில் இந்தியாவுக்கான உள்துறை அமைச்சராக இடம்பெற்றிருந்த சர் ஆர்.எஃப்.மூடி என்பவர் உள்துறைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில், "நேதாஜி ரஷியாவில் இருந்தால், அதனால் இங்கிலாந்துக்கு அபாயகரமான விளைவுகள் ஏற்படும்' என்று கூறியிருந்தார்.
 நேதாஜியின் மரணம் குறித்து, கடந்த 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி நரசிம்மராவ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு வெளியிட்ட குறிப்பில், விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்தார் என்பதை ஒப்புக் கொள்வதாகவும், இதில் சர்ச்சைகள் எழுவதற்கு முகாந்திரம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 ஜப்பான் நாட்டுத் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டுவர நரசிம்மராவ் அரசு முதலில் திட்டமிட்டபோதிலும், பிறகு அந்த யோசனையைக் கைவிட்டதாக ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
 மேலும், கடந்த 1966ஆம் ஆண்டு ரஷியாவில் உள்ள தாஷ்கண்டில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முகமது அயூப் கானும் ஒப்பந்தம் செய்து கொண்டபோது, அதுபற்றி மாஸ்கோ வானொலியில் நேதாஜி உரையாற்றினார் என்று அவரது நண்பரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மறைந்த எம்.பி.யுமான சமர் குஹா ஒருமுறை தெரிவித்தார் என்று மற்றொரு ஆவணம் கூறுகிறது.

No comments: