Thursday, August 29, 2013

தேவர் குருபூஜையை தடுக்கும் வகையில் நிபந்தனைகள் விதிப்பது நியாயமற்றது: மூமுக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார்


பசும்பொன் தேவர் குருபூஜையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது நியாயமற்றது. மனித உரிமையை பறிப்பதாகும் என மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் (படம்) தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்ற அரை நூற்றாண்டு காலமாய் பசும்பொன்தேவர் ஜெயந்தியன்று (அக்.30) முளைப்பாரி எடுத்தல், ஜோதி எடுத்து வருதல், முடி எடுத்தல் என்று தேவர் குருபூஜை நடந்து வருகிறது. 1984-ல் ஜி.எம்.பிரேம்குமார் வாண்டையார் முக்குலத்தோர் சங்கத் தலைமை பொறுப்பேற்ற முதல் பசும்பொன்னில் அன்னதானம் செய்து வருகிறோம். கடந்த 12 ஆண்டுகளாக எனது தலைமையில் லட்சக் கணக்கானோர் குருபூஜைக்கு திரள்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சியை பொறுத்தக் கொள்ள முடியாத அரசு குருபூஜைக்கு காவல்துறை மூலம் பல இடையூறுகள் செய்தாலும், அவற்றை மிறி குருபூஜையும், அன்னதானம் நிகழ்ச்சியும் நடத்தி வருகிறோம். எனது தலைமையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுங்கு தவறாமல் கட்டுப்பாடாக குருபூஜைக்கு சென்று வருவார்கள். ஆனால் கடந்த ஆண்டு அமைதியாக குருபூஜைக்கு சென்று திரும்பிய ஒரு வேனின் மீது பெட்ரோல் குண்டு வீசி தேவரின இளைஞர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரை ஒரு கும்பல் பறித்தது. இதனை காரணமாக கொண்டு காவல்துறையினர் வாடகை கார்களில் வரக்கூடாது என நிபந்தனை விதித்துள்ளனர்.மேலும் மும்பை, தில்லி, கல்கத்தா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வருவோர் விமான நிலையத்திலிருந்து பசும்பொன்னுக்கும் வாடகை வாகனங்களில்தான் வர இயலும். எனவே இந்த நிபந்தனை மக்கள் அஞ்சலி செலுத்துவதை தடுக்கும் நோக்கமாகும். பிற மாவட்டத்தினர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் வரக்கூடாது என்ற நிபந்தனையும், மற்ற மாவட்டங்களிலிருந்து அஞ்சலி செலுத்தும் வரும் மக்களை தடுப்பதாகும். ஜோதி எடுத்து வருதல், குருபூஜையில் முடி எடுத்தல் போன்ற வேண்டுதல்களின் ஒரு பகுதியாகும். ஜோதி கொண்டு வரக்கூடாது என்பது தனி மனித உரிமையை பறிப்பதாகும். எனவே புதிய நிபந்தனைகள், சட்ட விதிமுறைகளை காவல்துறையினர் ரத்து செய்ய வேண்டும். மக்களுடைய வேண்டுகோள் ஏற்று புதிய சட்ட விதிமுறைகளை தளர்த்தி தடைகளை நீக்க வேண்டும். தவறினால் அக்.30-ம் தேதி காலை 10 மணிக்கு மதுரை கோரிபாளையம் பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து எனது தலைமையில் 10 லட்சம் பேருடன் பசும்பொன்னுக்கு நடைபயணமாக செல்வோம் என ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் தெரிவித்துள்ளார்.

No comments: