Tuesday, August 6, 2013

‘‘அரசியலில் கலை இருக்கலாம்; கலையில் அரசியல் கூடாது’’ படவிழாவில், கவிஞர் வைரமுத்து பேச்சு

‘‘அரசியலில் கலை இருக்கலாம். ஆனால், கலையில் அரசியல் கூடாது’’ என்று கவிஞர் வைரமுத்து பேசினார். சினிமா படவிழா செல்வராகவன் டைரக்ஷனில், பரம் வி.பொட்லூரி தயாரித்து, ஆர்யா–அனுஷ்கா நடித்த ‘இரண்டாம் உலகம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. பாடல்களை டைரக்டர் மணிரத்னம் வெளியிட, டைரக்டர்கள் லிங்குசாமி, கே.வி.ஆனந்த் ஆகிய இருவரும் பெற்றுக் கொண்டார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். விழாவில் அவர் பேசியதாவது:–‘‘ஆண்டுக்கு 200 படங்கள் வெளிவரும் தமிழ் திரையுலகில் ஆயிரம் பாடல்கள் எழுதப்படுகின்றன. அந்த ஆயிரம் பாடல்களில் முத்துப்பாடல்களாய் ஒலிப்பவை, வெறும் பத்து பாடல்கள்தான். அந்த பத்து பாடல்களில் ஒரு பாடலாய் விளங்கும் சாத்தியக்கூறு, ‘இரண்டாம் உலகம்’ படத்தில் இடம்பெறும் ஏதேனும் ஒரு பாடலுக்கு இருக்கிறது. மொழி காதல் இலக்கிய தேடல் மிக்க இயக்குனர்களுக்கும், மொழி ஆசை கொண்ட இசையமைப்பாளர்களுக்கும் எப்போதுமே நல்ல பாடல்கள் அமைகின்றன. செல்வராகவனும், ஹாரீஸ் ஜெயராஜும் அப்படி மொழி காதல் மிக்க கலைஞர்கள். அதனால் வளமான பாடல்கள் வாய்த்திருக்கின்றன.இலக்கியத்தின் சாரங்களை பாட்டுக்குள் கொண்டு வருவதற்குத்தான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்து வருகிறேன். பறவையின் வெற்றி எனது இலக்கிய அனுபவம் ஒன்றை இந்த படத்தின் பாடலாக மடைமாற்றம் செய்திருக்கிறேன். நான் எழுதிய மூன்றாம் உலகப்போரில் எமிலி என்ற அமெரிக்க பெண், வானத்தில் பறக்கும் பறவையைப் பார்த்துவிட்டு, ‘‘பறவையின் வெற்றி எதில் இருக்கிறது?’’ என்று ஒரு கேள்வி கேட்பாள். யாருக்கும் விடை தெரியாது.‘‘மொத்த ஆகாயத்தையும் மறக்கடித்துவிட்டு, தன்னை மட்டும் கவனிக்க செய்யும் தந்திரத்தில் இருக்கிறது, ஒரு பறவையின் வெற்றி’’ என்று அவளே சொல்வாள். இலக்கிய அனுபவம் ‘‘கனிமொழியே என்னைக்கொன்று போகிறாய்’’ என்ற பாட்டில் இந்த இலக்கிய அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.‘‘பறவை பறக்கும்போது ஆகாயம் தொலைந்து போகும்...உன்னை பார்க்கும்போது இந்த உலகம் தொலைந்து போகும்’’ என்று எழுதியிருக்கிறேன்.பெண்களின் அழகை எழுதி எழுதி கவிஞர்கள் இளைத்துப்போனார்கள். ஆனால், பெண்களின் அழகு மட்டும் இளைக்கவே இலை. பெண்களை வர்ணிப்பது என்பது பிழையில்லை. பெண்ணின் அழகும், பெண்ணுக்கு ஒரு பெருமிதம்தான். அதனால்தான் காலந்தோறும் காதல் பாடல்கள் அழகை ஆராதிக்கின்றன. சினிமா நூற்றாண்டு இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் நிகழ்வது குறித்து மகிழ்கிறேன். தென்னிந்தியாவின் கலைத்தலைநகரமாக சென்னை விளங்குவது குறித்து பெருமைப்படுகிறேன். ஆனால் அந்த கலைவிழா மறைந்த கலைஞர்களை மட்டுமல்ல, வாழும் கலைஞர்களையும் கொண்டாடும் திருவிழாவாக திகழ வேண்டும். கலைத்தொண்டு செய்தவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும்.மனைவியின் பொட்டை அழித்துவிட்டு, மறைந்த கணவனின் படத்துக்கு பொட்டு வைப்பது போல் அது ஆகிவிடக் கூடாது. சாதித்த கலைஞர்கள் தகுதி பார்த்து பாராட்டப்பட வேண்டும். அரசியல்–கலை அரசியலில் கலை இருக்கலாம். ஆனால், கலையில் அரசியல் இருக்கக்கூடாது. காலம் கொண்டாடும் கலை விழாவாக திரையுலக நூற்றாண்டு விழா திகழ வேண்டும் என்பதை சிறந்தவர்களின் செவிகளுக்கு ஒரு சேதியாக சொல்கிறேன்.’’இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார். image: DSC_0349.jpg category: Cinema News. Tagging: கவிஞர் வைரமுத்து. . .

No comments: