Monday, November 18, 2013

தேவர் குருபூஜை விழாவில் தடை உத்தரவை மீறிய 56 பேர் கைது: எஸ்.பி.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேவர் குருபூஜை விழாவில் தடை உத்தரவை மீறி செயல்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக எஸ்.பி. மயில்வாகனன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். செய்திக்குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு நடந்த தேவர் குருபூஜை விழாவுக்கு விழாவில் கலந்துகொள்ள வருவோர் வாடகை வாகனங்கள் மற்றும் நடைபயணமாக செல்வதற்கு தடை விதித்தும், ஜோதி ஓட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்தும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை கடந்த 8.9.2013 ஆம் தேதி பிறப்பித்திருந்தது. இத் தடை உத்தரவுகளை மீறியதாக கடலாடி, கமுதி மற்றும் மண்டலமாணிக்கம் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலாடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பாக ஆப்பனூர்-2, கிடாத்திருக்கை-10, ஏனாதி-4 மற்றும் கமுதி காவல் சரக எல்கைக்கு உட்பட்ட சிங்கப்புலியாபட்டியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மண்டலமாணிக்கம் காவல் நிலைய அதிகார வரம்புக்கு உட்பட்ட அம்மன்பட்டி-14, முத்துப்பட்டி-6, பெருமாள்தேவன்பட்டி-10, வடுகபட்டி-9 பேர் உள்பட மொத்தம் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் அச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: