Wednesday, November 27, 2013

நாம் தமிழர் கட்சி

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59–வது பிறந்தநாளை நாம் தமிழர் கட்சி கொண்டாடி வருகிறது. மதுரை வில்லா புரத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாட்டமாக ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சிவானந்தம், செங்கன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நாம் தமிழர் கட்சி இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கேட்டு வலியுறுத்தி வருகிறோம். எங்கள் போராட்டம் ஆயுத போராட்டமாக இருக்காது. அரசியல் போராட்டமாகத் தான் இருக்கும். இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு என்பதுதான் எங்களது குறிக்கோள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடமாட்டோம். ஆனால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். திராவிட கட்சிகளால் தமிழர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. வாக்குக்காகவே அவர்கள் அரசியல் நடத்துகின்றனர். எங்களை முன்பு கேலி செய்தவர்கள் இப்போது தமிழர் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் நடத்துகின்றனர். இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், இனப் படுகொலை போன்றவை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இந்தியா செய்ய வேண்டிய வேலையை, இங்கிலாந்து செய்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதால் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கிறோம் என்று மொரீசியஸ் பிரதமர் அறிவித்தார். ஆனால் இந்திய பிரதமர் தான் பங்கேற்காததற்கான காரணத்தை சொல்லவில்லை. இலங்கையில் தமிழர்களின் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு பெருகி வருகிறது. இலங்கை பிரச்சினைக்கு தனி நாடுதான் நிரந்தர தீர்வு. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மாறவேண்டும். விரைவில் அதுமாறும். அப்போது இந்திய அரசு இலங்கையில் தமிழர்களின் தனி நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார். ரத்ததான முகாமின் போது 'தடா' சந்திரசேகரன், விஜயகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments: