Tuesday, November 26, 2013

பெட்ரோல் குண்டு வீச்சுவழக்கில் ஒருவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

மதுரை அருகே கடந்த 2012-இல் நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத ஒருவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த பலர் கடந்த ஆண்டு தேவர் ஜயந்திக்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்குச் சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பினர். மதுரை சிந்தாமணி பகுதியில் சுற்றுச்சாலையில் அவர்கள் வந்தபோது, மர்மக்கும்பல் கார் மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதன்படி 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கானது மதுரை 6-ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. வழக்கு விசாரணைக்கு அனைவரும் ஆஜரான நிலையில், சந்தோஷ் என்பவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் கோவிந்தராஜ் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை டிசம்பர் 30-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. .

No comments: