Wednesday, November 6, 2013

மரம் வளர்ப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: நடிகர் விவேக்

தமிழகத்தை பசுமையாக்கும் திட்டத்தில் இதுவரை 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் 80 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மரம் வளர்ப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என நடிகர் விவேக் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம் தொண்டு நிறுவனம், விவேக்கின் பசுமை பூமி அமைப்பின் சார்பில் 1,03,486 மரக்கன்றுகள் வழங்கி, நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் விவேக், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ் ஆகியோர் மரக்கன்றுகள் வழங்கினர். அப்போது பேசிய நடிகர் விவேக்: இதுவரை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று 20 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளேன். முதல் முறையாக கிராமத்திற்கு வந்து மக்களோடு மக்களாக மரக்கன்றுகள் நடுகிறேன். இந்தியாவில் விவசாயம் நெருக்கடியில் உள்ளது. மரங்களை இழந்ததால் மழையை இழந்தோம், நிலத்தடி நீரை இழந்தோம், இன்று விவசாயத்தையும் இழந்து தவிக்கிறோம். வந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்கள் இன்று அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றார் அவர். பின்னர் அவர் அளித்தப் பேட்டி: நான் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில்தான் இருந்தேன். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், வேண்டுகோளை ஏற்று ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். சொந்த மாவட்டத்தில் மரக்கன்று நடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு விவசாயியும் மரங்களை நட்டு அதனை வளர்க்க வேண்டும். தமிழகத்தை பசுமையான மாநிலமாக மாற்ற வேண்டும். மரம் வளர்ப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். நான் சினிமாவுக்கு வந்த 26 ஆண்டுகள் ஆகிறது. ரஜினி, கமல் ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். நான் பாலா படத்ததில் நடித்து வருகிறேன். அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றார் அவர். விழாவில் நடிகர் செல்முருகன், பசுமை பூமியின் ஒருங்கிணைப்பாளர் கே. அப்துல்கனி, கிராம உதயம் இயக்குநர் வி. சுந்தரேசன், மேலாளர் சு. தமிழரசி, கோபாலசமுத்திரம் பேரூராட்சித் தலைவர் என். கணேசன், துணைத் தலைவர் க. தங்கவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments: