Sunday, January 11, 2015

நேதாஜியை ஸ்டாலின்தான் கொன்றார்: ஆதாரத்துடன் சுப்ரமணியன் சுவாமி உறுதி

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் 1945-ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலினின் முன்னிலையில் தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் எனவே சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசிய கோப்பு தொகுப்புகளை நீக்க வேண்டும் என பாரதீய ஜனதா தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியிருக்கிறார். 

கொல்கத்தாவில் இன்று நடந்த மெர்சண்ட் சேம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதுபற்றி தெரிவித்த தகவல்கள் பின்வருமாறு:- 

எங்களிடம் இப்போது உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சுபாஷ் சந்திர போஸ் விபத்தில் பலியானதாக கூறி உண்மை மறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், அவர் சீனாவிலுள்ள மன்சூரியாவுக்கு தப்பி செல்லும் போது அந்த பகுதி ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ரஷ்யா சந்திர போஸை நன்றாக கவனித்துக் கொள்ளும் என்று நம்பப்பட்டது. ஆனால், சர்வாதிகாரி ஸ்டாலின் அவரை சைபீரியாவிலுள்ள ஜெயிலில் அடைத்து வைத்து 1953-ம் ஆண்டு வாக்கில் தூக்கிலிட்டோ அல்லது துன்புறுத்தியோ கொன்றிருக்கிறான். அப்போது இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கு சுபாஷ் சந்திர போஸ் சைபீரியாவிலுள்ள யாகுட்ஸ்க் ஜெயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியும். உண்மையாக ஆராயாமல் நேதாஜியின் ஆவணங்களை ரகசிய தொகுப்பிலிருந்து நீக்குவது கடினம். இதனால், பிரிட்டன் மற்றும் ரஷ்ய நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், அந்த ரகசிய தகவல்களை வெளியே கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தே தீருவேன். சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த மர்மம் முடிச்சவிழ்க்கப்பட வேண்டும். அவை ரகசிய தொகுப்பிலிருந்து வெளிவர வேண்டும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதில் சுபாஷ் சந்திர போசுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

No comments: